ஜப்பான் வழங்கிய மானியத்தின் கீழ் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சுகாதார அவசர காலங்களில் இலங்கையை அணுகும் முக்கிய இடங்களான குறித்த பகுதிகளில் பயணிகள், ஊழியர்களின் பாதுகாப்பிற்காக ஜப்பான் அரசாங்கம் 1.17 பில்லியன் யென் மானியத்தை சர்வதேச குடியேற்ற அமைப்பு மூலம் வழங்கியுள்ளது.
இந்த மானியத்தின் கீழ் சர்வதேச நடைமுறைகள், பரிந்துரைகள் மற்றும் தரங்களுக்கு அமைவாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் கொழும்பு துறைமுகம் ஆகியவற்றின் வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சுகாதார அமைச்சு, குடிவரவுத் திணைக்களம் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவற்றுடன் இணைந்து சம்பந்தப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.