கினியாவில் பேர் சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில், எபோலா தொற்றுநோய் பரவல் அபாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கினியாவில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எபோலா தொற்றுநோய் பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் கினியா மற்றும் மேற்கு ஆபிரிக்காவில் பேரழிவை ஏற்படுத்தியதுடன், இதனால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.கினியாவில் ஒரு செவிலியரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட பலருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட எபோலா அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை நால்வர் தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும், அரசு மற்றும் உலகமெங்கிலும் உள்ள தொண்டு நிறுவனங்களில் இருந்து உதவி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.7 பேருக்கு இதுவரை எபோலா தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கினியாவின் சுகாதார அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த எண்ணிக்கை கண்டிப்பாக அதிகமிருக்கும் என்றே அஞ்சப்படுகிறது. இதனிடையே, ஒருவர் தனிமைப்படுத்துதல் முகாமில் இருந்து தப்பியதாகவும், துரித நடவடிக்கைக்கு பிறகு, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என கூறப்படுகிறது.
செவிலியர் ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கே எபோலா கண்டறியப்பட்ட நிலையில், எவ்வாறு பரவியது என்பது தொடர்பில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
கினியாவில் இதுவரை மூவர் எபோலாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். இதனையடுத்தே எபோலா பரவல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த 2013-2016 க்கு இடையில் ஏற்பட்ட இந்த எபோலா தொற்றுநோய் பரவல், முக்கியமாக கினியா மற்றும் அண்டை நாடுகளான சியரி லியோன், லைபீரியாவில் 11,323 பேரைக் கொன்றது குறிப்பிடத்தக்கது.