பிரித்தானியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் எதிரொலியாகப் பிரித்தானியா பொருளாதாரம் கடந்த 300 ஆண்டுகளில் கண்டிராத மிகவும் மோசமான நிலையை 2020-ல் அடைந்துள்ளது.
கொரோனாவால் பிரித்தானியா பொருளாதாரம் 2020-ல் -9.9 சதவீதம் அளவிலான பாதிப்பை எதிர்கொண்டது. இது 2009-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ஏற்பட்ட நிதியியல் நெருக்கடி காலகட்டத்தை விடவும் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.
இதுமட்டும் அல்லாமல் 2021-லும் பிரித்தானியா நாட்டில் இன்னும் பல பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளது.
இதேவேளையில் 300 ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானியாவில் விவசாயம் மட்டுமே முக்கிய வர்த்தகமாக இருந்த காலகட்டமான 1709 ஆண்டில் ஏற்பட்ட Great Frost நிகழ்வுக்குப் பின் பிரித்தானியா பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை அடைந்தது 2020 கொரோனா பாதிப்பில் தான் எனப் பிரித்தானியாவின் தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டின் 4-வது காலாண்டில் உலக நாடுகளின் பொருளாதாரம் சரிவில் இருந்து வேகமாக மீண்டு வரத் துவங்கிய போது பிரித்தானியா 3வது முறையாக ஊரடங்கை அறிவித்தது. இந்த ஊரடங்கு அறிவிப்பில் பள்ளிகள், உணவகங்கள், அத்தியாவசிய தேவை அல்லாத அனைத்து கடைகளையும் மூடப்பட்டது.
குறிப்பாக வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.