அளுத்கம பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் சுமார் 3100 ரூபா பெறுமதியான குழந்தைப் பால் மாவை திருடிய குற்றச்சாட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பாதுகாப்பு உத்தியோகத்தரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் அளுத்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அத்தோடு கைதான சந்தேக நபர் தம்மிடம் தேவையான பால் மா இல்லாத காரணத்தினால் தான் தனது ஒரு வயது மற்றும் எட்டு மாத குழந்தைகளுக்காக அதனை எடுத்து மறைத்ததாக பொலிஸாரிடம் கூறி அழுததாக தகவல் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் மோதர எகொட உயன பிரதேசத்தில் வசிக்கும் மீனவர் (30 வயது) எனவும் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார பிரச்சினை காரணமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியாத நிலையில் குழந்தைகளுக்காக இந்தத் திருட்டைச் செய்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் களுத்துறை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கின்றனர்.