திருப்பத்தூர் மாவட்டத்தில், குறி சொல்லும் காளியம்மன் கோயில் பூசாரி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாபட்டு அடுத்த வடுகமுத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். 33 வயதாகும் சீனிவாசன் அந்த பகுதியில் பஞ்சாயத்து டேங்க் ஆப்பரேட்டராகப் பணிபுரிந்து வந்தார். இத்துடன், சிறிய அளவில் குடிசை ஒன்றை அமைத்து அதில் காளியம்மன் சிலை வைத்து, வழிபட்டுக் குறி சொல்லி வந்துள்ளார். இந்த நிலையில், அமாவாசை இரவு பூஜையை முடித்து, காளியம்மனை வழிபட்டுவிட்டு, கோயிலிலேயே படுத்துத் தூங்கியுள்ளார்.
இந்த சூழலில், காலையில் கோயிலைப் பெருக்க பணியாளர்கள் வந்த போது, சீனிவாசன் தலையில் ரத்த காயத்தோடு சடலமாகக் கிடந்ததைப் பார்த்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பணிப் பெண் அலறியடித்துக் கத்தியுள்ளார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து குரிசிலாபட்டு போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டுத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சீனிவாசனுக்கு, ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில், குறி கேட்க வந்த வேறொரு பெண்ணை குறி வைத்ததால் கொல்லப்பட்டாரா அல்லது அப்பகுதியில் இரண்டு கோயில்கள் உள்ளதால், குறி சொல்வதில் ஏற்பட்ட போட்டி காரணமாகக் கொலை நடந்து இருக்குமா எனும் கோணத்தில் குரிசிலாபட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன்னைத் தேடி வந்த பக்தர்களின் எதிர்காலம் குறித்து, குறி சொல்லி அவர்களின் துயர் நீத்த சீனிவாசன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவரது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.