கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்தினபுரத்தில் கிணற்றுக்குள் காணப்படும் சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இரத்தினபுரம் பகுதியில் பராமரிப்பு இன்றிய கிணறு ஒன்றில் ஆண் ஒருவருடையது எனச் சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று காணப்படுகின்றமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரத்தினபுரம் பகுதியில் பராமரிப்பு இன்றிக் காணப்படுகின்ற குறித்த காணிக்கு காணி உரிமையாளர்கள் சென்ற போது, கிணற்றினுள் பாய் ஒன்றினால் சுற்றியவாறு சடலம் ஒன்று காணப்பட்டமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவத்தை அடுத்து அங்கு சென்ற குற்றவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிணற்றினை அண்மித்த பகுதியில் சில தடயங்கள் காணப்படுவதாலும் சடலம் பாயினால் சுற்றிக்காணப்படுவதாலும் குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருப்பதாக தெரியவருகிறது.
நாளை (16) தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, மாவட்ட நீதிபதி சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் சில நாட்களுக்கு முன்னர் போடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.