பேருவளை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்டவர் அளுத்கம, மொரகல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் என பேருவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரான வர்த்தகர், நெஞ்சுவலியால் சுகவீனமுற்றிருந்த தனது தந்தையை நேற்று (25) காரில் பேருவளை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்து வந்துள்ளார்.
தந்தைக்கு கடுமையான சுகயீனம் இருப்பதாகவும், அதனால் காருக்குள் வந்து பரிசோதனை செய்யுமாறு மருத்துவரிடம் கோரியதாகவும், அதனை வைத்தியர் மறுத்ததையடுத்து, ஆத்திரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
தாக்குதலுக்கு உள்ளான வைத்தியரின் கையில் காயம் ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.