நாடளாவிய ரீதியில் பதிவாகும் பல்வேறு துஷ்பிரயோக சம்பவங்களை கருத்தில் கொண்டு இளம் காதலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வடமேற்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அண்மைய நாட்களில் நாடளாவிய ரீதியில் இளம் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் துஷ்பிரயோக சம்பவங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்ததாக ஜயலத் தெரிவித்தார்.
விசேடமாக பாடசாலை அல்லது டியூஷன் வகுப்புகளுக்கு செல்வது போன்று பாவனை செய்து குருநாகல் நகருக்கு காதலர்களை தேடி வரும் பாடசாலை மாணவிகள் மீது துஷ்பிரயோக சம்பவங்கள் மேற்கொள்ளப்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜயலத் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவர்களில் பெரும்பான்மையானவர்கள் குருநாகலில் இருந்து வெகு தொலைவில் வசிக்கும் மாணவிகள் எனவும், சில மாணவிகள் தமது காதலனை திடீரென அடையாளம் காணும் போது அவரின் பெயரையோ அல்லது அவர் யார் என்றுக் கூட தெரியாத அளவிற்கு ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருமணமானவர்களுடன் காதல் உறவு சில மாணவிகள் திருமணமான பெரியவர்களுடன் காதல் உறவில் ஈடுபடுவதாகவும், அவ்வாறானவர்களால் அவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் செய்திகள் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டு குருநாகலுக்கு வரும் இளம் காதலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது உட்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜயலத் தெரிவித்தார்.
அதற்கமைய, குருநாகலுக்கு வரும் பாடசாலைக் காதலர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் அந்தத் தகவலை பெற்றோருக்கு தெரியப்படுத்துவதுடன் காதலர்களின் பாதுகாப்பிற்காக சோதனைச் சாவடியை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.