நாடாளுமன்றத்தில் இருக்கும் 225 காகங்களில் தானும் ஒரு காகமாக இருப்பது குறித்து வெட்கப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது தேர்தல் ஒன்றுக்கு சென்றால், 225 பேருக்கு வாக்குகளுக்கு பதிலாக அடியும் உதையுமே கிடைக்கும். மக்களுக்கு உடன்பாட்டு அரசியல் கசப்பாகியுள்ளது.
தற்போது அரசியல் மாத்திரமல்ல வர்த்தக உலகத்திலும் உடன்பாடுகள் நிறைந்துள்ளன. அரச சொத்துக்களை கொள்ளையடித்தன் மூலமே பல வர்த்தகர்கள் செல்வந்தர்களாக மாறினர்.
அந்த வர்த்தகர்களின் பெயர்களை வெளியிடவும் தயார். இவர்களில் சிலர் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து நாட்டை அழிக்க முயற்சித்து வருகின்றனர். நாடு என்ன கேட்கின்றது என்பதை அரசாங்கத்தை போன்று எதிர்க்கட்சியும் புரிந்துக்கொள்ள வேண்டும்.
அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்பது தற்போது தெளிவாக புலப்படுகிறது. காலம் தாழ்த்துவதால், நாடு அதளபாதாளத்தை நோக்கி செல்வது மட்டுமே நடக்கும்.
நாட்டின் பிரச்சினையை தீர்க்க முடிந்தவர் எவராவது இருந்தால், எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தியாகம் செய்ய தயாராக இருக்கின்றேன் எனவும் ரொஷான் ரணசிங்க கூறியுள்ளார்.