ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன பொலிஸ் அதிகாரியான எஸ். இளங்கோவன், கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு நீர் வழங்கும் சுமார் 40 அடி உயரமான நீர்த்தாங்கியில் இருந்து சடலமாக நேற்று (29) மீட்கப்பட்டார்.
பூண்டுலோயாவை வசிப்பிடமாகக் கொண்ட இவர், கொத்மலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றினார். இந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதியன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அன்றைய தினமே இவர் காணாமற் போயுள்ளார். அன்றிலிருந்து நேற்று (29) வரையிலும் அவரது மனைவி உட்பட உறவினர்கள் தேடிக்கொண்டே இருந்துள்ளனர்.
இந்நிலையில், கம்பளை ஆதார வைத்தியசாலையின் வாட்டுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் ஒருவகையான மனம் வீசுவதாக நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, நீர்த்தாங்கியில் சடலமொன்று மிதப்பது கண்டறியப்பட்டது.
நீதவானின் விசாரணையின் பின்னர் சடலம் மீட்கப்பட்டது. அந்த சடலம், காணாமல் போன பொலிஸ் அதிகாரி எஸ். இளகோவன் என அவருடைய மகன் அடையாளம் காண்பித்தார்.