கனடாவில் படுகொலை செய்யப்பட்ட ஆறு இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் ஒட்டவாவில் முன்னெடுக்கவுள்ளதாக கனடாவிலுள்ள பௌத்த காங்கிரஸ் அமைப்பின் தலைவரும் ஒட்டாவா ஹில்டா ஜயவர்தனாராமய விகாரையின் விகாராதிபதியுமான நுகேகலயாகே ஜினாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் விகாரை நன்கொடையாளர் சபையின் ஆதரவுடன் ஆறு பேரின் இறுதிக்கிரியைகளையும் இடம்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு அவர்களது குடும்பத்தாரும் விரும்பம் தெரிவித்துள்ளதாகவும் நுகேகலயாகே ஜினாநந்த தேரர் மேலும் தெரிவித்தார்.
கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்களான டிலந்திகா ஏகநாயக்க மற்றும் காமினி அமரகோன் ஆகியோரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் சிலரை இறுதிச் சடங்குகளுக்காக கனடாவுக்கு அழைத்துவருவது தொடர்பில் கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டிற்கு கொண்டுவர பெருந்தொகை பணம் செலவாகும் என தெரிவிக்கப்பட்டள்ளது. அதேவேளை மேலதிக விசாரணைகள் காரணமாக இதுவரையில் சடலங்களை கனேடிய பொலிஸார் உரிய தரப்பினரிடம் கையளிக்வில்லை என்றும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், உயிரிழந்த ஆறு பேரின் இறுதிக் கிரியைகள் அவர்களின் உறவினர்களின் விருப்பப்படி மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.