இலங்கையில் இந்து சமய மதகுரு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் பல கொள்ளை, கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் யாஎல காட்டில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கதிர்காமம் பொலிஸாரால் பல நாட்களாக முன்னெடுக்கப்பட்டி வந்த சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கதிர்காமம் பிரதேசத்தில் சமீப காலமாக இடம்பெற்ற பல கொலைச் சம்பவங்களின் பிரதான சந்தேக நபராக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர் யால வனப்பகுதியில் மறைந்திருந்து கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் யாஎல வனத்தில் உள்ள வன விலங்குகளை வேட்டையாடி பாரியளவிலான இறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, 2011ஆம் ஆண்டு கதிர்காமம் 20 ஏக்கர் பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கடந்த (2021) ஜுலை மாதம் கதிர்காமம் நாகஹா தெரு பகுதியில் இந்து மதகுரு ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக இந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.