கண்டி எசல பெரஹெரா இன்று இரவு வீதி உலா வரவுள்ளது. இம்முறை எசல பெரஹெரா ஊர்வலம் இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
தலதா மாளிகை பெரஹெராவிற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் இதுவரையில் தயார் செய்யப்பட்டுள்ளதாக தலதா மாளிகை பெரஹெர ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜயம்பதி வெத்தகல தெரிவித்துள்ளார்.
நாத, விஷ்ணு, பத்தினி அம்மன் , கதிர்காமம் ஆகிய நான்கு பெரிய ஆலயங்களின் பேரணிகள் அணிவகுத்து, தலதா வீதி, டி.எஸ்.சேனநாயக்க வீதி, பன்சல வீதி, தேவ வீதி, கொழும்பு வீதி, யட்டிநுவர வீதி, ரஜ வீதி ஆகிய வீதிகள் வழியாக வலம் வரும் ஊர்வலம் ஸ்ரீ தலதா மாளிகையை சென்றடையவுள்ளது.
ஊர்வலத்தின் நீளம் 2 கிலோமீற்றர் எனவும் இதில் சுமார் 35 நடனக் குழுக்கள் பங்குபற்றவுள்ளதாக ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜயம்பதி வெத்தகல தெரிவித்தார்.
இதன்போது 35 யானைகள் பங்குபற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஊர்வலத்தில் சுமார் 2500 பேர் பங்கேற்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊர்வலத்தைக் காண 300,000 இற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதோடு, ஊர்வலத்தின் போது கண்டியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.