இலங்கைக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் ஏனையவர்களுக்கும் இணையவழி விசா வழங்கப்படாமையால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள On Arrival Visa கருமபீடத்தில் விசா பெற நீண்ட வரிசையில் காணப்படுகின்றனர்.
இலங்கைக்குள் நுழைவதற்கான விசாக்களை வழங்குவதற்கு குளோபல் நிறுவனத்தை நீக்கிவிட்டு பழைய முறைப்படி விமான நிலையத்தில் விசா வழங்க உயர் நீதிமன்றம் கடந்த 02 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்தது.
எனினும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பழைய முறைப்படி இணையவழி விசா வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்காத காரணத்தினால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா பெற நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உயர் நீதிமன்ற உத்தரவுடன் இணையவழி முறைமை மூலம் விசா வழங்குவது நிறுத்தப்பட்டதுடன், இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் உட்பட அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தே விசா பெற வேண்டும்.
இலங்கையில் ஆகஸ்ட் மாதம் முதல் சுற்றுலாப் பருவம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கண்டி எசல பெரஹராவைக் காண ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதன் காரணமாக அதிக எண்ணிக்கையிலான விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஒரே நேரத்தில் வரும்போது, விமான நிலையத்தில் வருகை விசா பெறுவதற்கு நீண்ட வரிசையில் தொடர்ந்து நிற்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.