நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிகளை அடுத்து மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் பெரும் ஆர்வகாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஏஜன்சிக்காரர்களை நம்பி அவர்களிடம் இலட்சங்களை இழக்கும் அப்பாவி மக்கள் தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
இது குறித்து முகநூலில் நபர் ஒருவ5ர் பதிவிட்டுள்ளதாவது,
அண்மையில் மட்டக்களப்பில் ஒருவர் என்னை வந்து சந்தித்தார். 40 இலட்சம் ஏஜன்சிக்கு கட்டி சுவிஸிற்கு வர இருக்கிறேன். வந்த உடன் அங்கு வேலை செய்யலாம் தானே என்றார். ஓறிஜினல் விசா, நேரடியாக சுவிஸ் ஏயாபோர்ட்டில் போய் இறங்கலாம் என ஏஜன்சிக்காரன் சொல்லி இருக்கிறான். பெரும்பாலும் அடுத்த வாரம் சுவிஸிற்கு வந்து விடுவேன் என சொன்னார்.
40 இலட்சத்தை 6 மாதத்தில உழைச்சிடலாம் என ஏஜன்சிக்காரன் சொன்னான். வந்த உடன் நல்ல வேலை எடுக்கலாம் தானே என என்னிடம் கேட்டார். சுவிஸிற்கு வந்தாலும் உடனடியாக வேலை எடுக்க முடியாது. அங்கு வந்த உடன் அங்கு அகதி தஞ்சம் கோர வேண்டும். அதன் பின் உங்களை உடனடியாக வெளியில் விட மாட்டார்கள்.
சுமார் ஒரு மாதம் முகாமில் வைத்திருப்பார்கள். நீங்கள் அகதி தஞ்சம் கோருவதற்கான காரணத்தை வைத்து உங்களை மாகாணம் ஒன்றில் உள்ள முகாமிற்கு மாற்றுவார்கள். அந்த முகாமில் மூன்று மாதமோ அல்லது ஒரு வருடமோ இருக்க வேண்டும். அக்காலப்பகுதியில் நீங்கள் வேலை செய்ய முடியாது. உங்கள் அகதி கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் சில வேளை அந்த முகாமில் வைத்தே உங்களை உங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்புவார்கள். இல்லை என்றால் உங்களை அந்த மாகாணத்தில் உள்ள மாவட்டம் ஒன்றிற்கு அனுப்புவார்கள்.
இக்காலப்பகுதியில் என் கார்ட் அல்லது எவ் கார்ட் வழங்குவார்கள். எவ் கார்ட் உள்ளவர்களுக்கு வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கலாம். உங்கள் அகதி கோரிக்கை ஏற்கப்பட்டால் பி காட் கிடைக்கும். அதன் பின்னர் மொழியை படிப்பதற்கும் வேலை செய்வதற்கும் வாய்ப்பு கிடைக்கும். அதுவும் ஒரு வருடத்திற்கு பின்னர் தான் வேலை செய்யக்கூடியதாக இருக்கும்.
சுவிஸில் இப்போது வேலை எடுப்பதும் கஸ்டம். சுவிஸில் அகதி தஞ்சம் கோருபவர்களில் 5 வீதமானவர்களின் அகதி தஞ்ச கோரிக்கை தான் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. நீங்கள் அகதி தஞ்சம் கோருவதற்கு என்ன காரணம் சொல்லப்போகிறீர்கள் என கேட்டேன். இந்த நாட்டுப்பிரச்சினையை தான் சொல்ல சொல்லி ஏஜன்சிக்காரன் சொன்னான் என்றார்.
இலங்கையில் வாழ ஏலாது. பஞ்சம் பிரச்சினை எண்டு சொல்லலாம் தானே என்றார். இலங்கையில் இப்போது இருக்கும் பொருளாதாரப்பிரச்சினையை வைத்து அகதி தஞ்சம் கோர முடியாது. உங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் இலங்கையில் வாழ முடியாத அச்சுறுத்தல் நெருக்கடி இருந்தால் அதை கூறலாம் என கூறி அவரை அனுப்பி வைத்தேன்.
சுவிஸிற்கு வருவதற்கு எப்படி விசா எடுத்தார் என்பது எனக்கு தெரியாது. அதை பற்றி நான் அவரிடம் விசாரிக்க விரும்பவும் இல்லை. 40 இலட்சம் ஏஜன்சிக்கு கட்டி சுவிஸிற்கு வந்து திருப்பி அனுப்பபட்ட பலரை நான் பார்த்திருக்கிறேன். சுவிசிற்கு வந்து 6மாதத்திற்குள் ஏஜன்சிக்கு கொடுத்த 40 இலட்சத்தையும் உழைத்து விடலாம் என்ற அவரின் கனவையும் நான் கலைக்க விரும்பவில்லை.
நீங்கள் நினைப்பது போல நேரடியாக சுவிஸ் ஏயாப்போர்ட்டில் வந்து இறங்கி உங்களை இலகுவாக சுவிஸ் குடிவரவு திணைக்களம் ஏற்றுக்கொள்ளும் என்றோ அல்லது நீங்கள் நினைப்பது போல 6 மாதத்தில் 40 இலட்சத்தை உழைக்கலாம் என்றோ என்னால் சொல்ல முடியாது. அதை சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலும் அவர் இல்லை.
ஏஜன்சிக்காரர்களின் கதைகளையும் முழுமையாக நம்பி விடாதீர்கள் என ஆலோசனை கூறி அனுப்பி வைத்தேன். ஏஜன்சிக்கு காசு கொடுத்து சுவிஸிற்கு வந்து என் கார்டுடன் அல்லது எவ் கார்ட்டுன் வேலை இல்லாமல் அலைபவர்களையும் எப்போது திருப்பி அனுப்ப போகிறார்கள் என்ற அச்சத்தில் அலையும் பலரையும் நான் பார்த்திருக்கிறேன்.
ஆனால் இலங்கையில் நான் அண்மையில் இருந்த காலத்தில் சந்தித்த பலரும் இங்கு வாழ முடியாது. வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற மனநிலையுடனேயே வாழ்கிறார்கள். இதை வைத்துக்கொண்டு ஏமாற்று பேர் வழிகளான ஏஜன்சிக்காரர்களின் காட்டில் அடை மழைதான்.