டெல்டா உருமாற்ற கொரோனா வைரஸ், தற்போது இந்தோனேசியாவில் வேகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் உயிரிழப்போர் எண்ணிக்கையும் 558 ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஜாவா மற்றும் பாலி தீவுகளில், நோய் பரவல் வேகம், அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேவர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த 2 ஆம் தேதி வரை மருத்துவமனைகளில் 75 சதவிகித படுக்கைகள் நிரம்பி விட்டதாகவும், ஜாவா தீவில் 90 சதவிகித அளவுக்கு மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி இருப்பதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Advertisement
நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியிருப்பதால், சவப்பெட்டிகளுக்கான ஆர்டர்கள் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக, அதை உருவாக்கும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவலுக்கு முன்பாக நாளொன்றுக்கு 10 சவப்பெட்டிகளை செய்வதற்கான ஆர்டர்கள் மட்டுமே வந்ததாகவும், தற்போது 30-க்கும் மேற்பட்ட சவப்பெட்டிகளுக்கான ஆர்டர்கள் வருவது மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை பின்பற்றுவது போன்ற வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சவப்பெட்டி தயாரிக்கும் தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.