கம்பளை – கம்பளை-கண்டி பிரதான வீதியில், முருகன் ஆலயம் முன்பாக செயற்பட்டு வந்த உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்று பொலிஸாரினால் நேற்றைய தினம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
”குறித்த விற்பனை நிலையம் சட்டவிரோதமாக காலாவதியான உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்து வருவதாக” பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சுமார் ஒரு கோடி ரூபாவிற்கு மேல் பெறுமதியான உரங்கள் மற்றும் வேளாண் இரசாயனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காலாவதியான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள், பதிவு செய்யப்படாத மற்றும் அடையாளம் காணப்படாத இரசாயன பொருட்கள், தடைசெய்யப்பட்ட நச்சுத்தன்மையுள்ள களைக்கொல்லிகள், 2014ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மிகவும் பழைய உர வகைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த விற்பனை நிலையம் சமீபத்தில் இலவசமாக வழங்கப்பட்ட உரங்களை விவசாயிகளிடமிருந்து திரட்டி,விற்பனை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டபூர்வமாக விற்பனை செய்யப்படும் உரங்களுக்கிடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த இரசாயனங்கள், விவசாயிகளின் உடல்நலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

