ஐரோப்பாவில் வசிக்கும் பெருந்தொகையான இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள ஐநா அலுவலகத்துக்கு முன்பாக நேற்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஜெனீவாவில் உள்ள ஐநா அலுவலகத்துக்கு முன்பாக ‘கோட்டகோகம’ கிளை ஒன்றையும் அவர்கள் நிறுவியுள்ளனர். இந்த நிகழ்வில் இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம் உட்பட ஐரோப்பாவில் வாழும் பெருமளவான புலம்பெயர் இலங்கையர்கள் கலந்துகொண்டனர்.
நேற்று காலை இந்த போராட்டம் , ஐ.நா அலுவலகத்துக்கு முன்பாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு பல மணிநேரம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதை காணமுடிந்தது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கமே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலர் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் பாரிய வாழ்க்கைச் சுமையால் அவதியுறும் மக்களை மேலும் ஒடுக்காமல் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
அதேசமயம் தற்போதைய அரசாங்கம் பதவி விலகி திருட்டு, மோசடி மற்றும் ஊழல் அற்ற அரசாங்கத்தை ஏற்படுத்தினால், அந்நிய செலாவணி வருமானத்தை அதிகரிக்க, இலங்கை பொருளாதாரத்திற்கு டொலர்களை சேர்க்க தாம் தயாராக இருப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் தெரிவித்தததாக கூறப்படுகின்றது.