எலக்ட்ரானிக் கழிவுகளில் இருந்து தங்கத்தை மீட்டெடுக்க விஞ்ஞானிகள் மிகவும் பயனுள்ள முறை ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஒரு டாலர் செலவில் 50 டாலர் மதிப்புள்ள தங்கம் கிடைக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மின்கழிவுகளிலிருந்து விலைமதிப்பற்ற தங்கத்தை மீட்டெடுக்க புரதக் கடற்பாசிகள், சீஸ் தயாரிப்பில் பயன்படுத்தும் பொருட்கள் போன்றவற்றை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த முறை நிலையானது, வணிக ரீதியாக சாத்தியமானது என்றும் அவர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வில், 20 பழைய கம்ப்யூட்டர் மதர்போர்டுகளை பயன்படுத்தி, அவற்றில் இருந்து 22 காரட் தங்கத்தை 450 மில்லிகிராம் தங்கத்தை எடுத்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த கண்டுபிடிப்பில் மூலப் பொருட்களுக்கான கொள்முதல் செலவு, முழு செயல்முறைக்கான செலவுகள் ஆகியவற்றைவிட, கிடைக்கும் தங்கத்தின் மதிப்பு 50 மடங்கு அதிகமாக இருக்கும் என்கின்றனர்.
ஆராய்ச்சியாளர்கள் 20 மதர்போர்டுகளில் இருந்து உலோக பாகங்களை அகற்றி, அவற்றை அமிலத்தில் கரைத்து, பின்னர் தங்க அயனிகளை ஈர்க்க ஒரு புரத இழை கடற்பாசியை கரைசலில் வைக்கிறார்கள்.
மற்ற உலோக அயனிகளும் இழைகளுடன் ஒட்டிக்கொள்ளும் என்றாலும், தங்க அயனிகள் சிறப்பாகக் கவரப்படுகின்றன. இந்த முறையில் சேகரிக்கப்பட்ட தங்க அயனிகளைப் பிரிக்க விஞ்ஞானிகள் கடற்பாசியை சூடாக்குகிறார்கள்.
அப்போது தங்க அயனிகள் செதில்களாகப் பிரித்து, அவற்றை உருக்கி மீண்டும் ஒரு தங்கக் கட்டியாக மாற்றுகின்றனர். இந்த முறையைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட தங்கம் 22 காரட் தங்கத்தை ஒத்திருக்கிறது.
அதில் 91 சதவிகிதம் தங்கமும், மீதி செம்பும் உள்ளது என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“நான் மிகவும் குறிப்பாகச் சொல்ல விரும்புவது என்னவென்றால், மின்னணுக் கழிவுகளில் இருந்து தங்கத்தைப் பெறுவதற்கு நாங்கள் உணவில் பயன்படுத்தும் பொருட்களைப் பயன்படுத்துகிறோம்” என்று ஆய்வில் பங்கெடுத்துள்ள பேராசிரியர் ரஃபேல் மெசெங்கா தெரிவித்துள்ளார்.