பொலிஸ் வேன்களில் சேற்றை வாரி அடித்து பிடிபட்ட இரண்டு சிறுவர்களுக்கு தாங்கள் செய்த தவறான செயலை சுத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.
இங்கிலாந்தின் Sunderland பகுதியில் உள்ள Peterlee நகரத்தில் 16 வயதுள்ள இரண்டு சிறுவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் வேன்களில் சேற்றை வாரி அடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
விசாரித்து, அடுத்த மூன்று நாட்களில் அச்சிறுவர்களை பொலிஸ் கைது செய்தது.
ஆனால் அவர்களின் சமூக விரோத நடத்தைக்காக அவர்களை கடுமையாக தண்டிக்காமல் நல்ல முறையில் பாடம் புகட்டலாம் என்று Peterlee காவல்துறை முடிவெடுத்தது.
வியாழக்கிழமை பிற்பகல் அங்கிருந்த பொலிஸ் வாகனங்கள் அனைத்தையும், பல் துலக்கும் பிரஷ் மற்றும் சோப்பு நீரைப் பயன்படுத்தி கழுவுமாறு கூறப்பட்டது.
சிறுவர்களுக்கு அவர்களது பெற்றோர்களும் மிகவும் ஆதரவாக இருந்தனர்.
Peterlee Neighbourhood Team-ன் இன்ஸ்பெக்டர் Emma Kay, நகரும் வாகனங்களில் பொருட்களை வீசுவது பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை இந்த இருவரும் உணர, அவர்கள் கார்களை கழுவும் இந்த நேரம் போதும் என நினைப்பதாக கூறியுள்ளார்.
இது இரண்டு இளம் குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை உணர கொடுக்கப்பட்ட நேரம் மட்டுமல்ல, பொலிஸ் அதிகாரிகளும் சிறுவர்களுடன் தங்கள் நேரத்தை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பு என அவர் கூறினார்.
Peterlee காவல்துறை இந்த பிரச்சினையை கையாண்ட விதம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, மேலும் பேஸ்புக் பக்கத்திலும் அவர்களுக்கு லைக் மற்றும் ஷேர் அதிகம் கிடைத்ததுள்ளது.