காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் என்டிஜன் பரிசோதனையில் நெகட்டிவ் என அறிவிக்கப்பட்ட நபர் ஒரு சில மணித்தியாலங்களில் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
45 வயதுடைய குறித்த நபர் பெல்பொலஹேன பிரதேசத்தை சேர்ந்தவராகும். அவர் கொழும்பில் கட்டட நிர்மாணிப்பு இடத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்னர் அவர் இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு வருகைத்தந்து என்டிஜன் பரிசோதனை ஒன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு அவருக்கு கொவிட் தொற்றில்லை என தெரியவந்துள்ளமையினால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
எப்படியிருப்பினும் தனியான அறை ஒன்றை பயன்படுத்துமாறும் குடும்பத்தில் ஏனையோருடன் நெருங்கி செயற்பட வேண்டாம் என சுகாதார பரிசோதகர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
வீடு திரும்பிய பின்னர் அவரது உடல் நிலைமை மோசமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனையின் போது மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனை அவர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட நிமோனியாவில் அவர் உயிரிழந்துள்ளார் என உறுதியாகியுள்ளது.