ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல மீளாய்வு அறிக்கை எதிர்பார்க்கப்பட்டது போலவே வெளிவந்திருக்கிறது. அது சிங்கள கூட்டு உளவியலை ஒப்பீட்டளவில் அதிகம் பயமுறுத்தாதவிதத்தில் இலங்கை முழுவதுக்குமான மனித உரிமைகள் தொடர்பான ஓர் அறிக்கை என்ற வெளித்தோற்றத்தை காட்டுகிறது. இந்த அறிக்கை இவ்வாறு அரசாங்கம் சுதாகரித்துக் கொள்வதற்கு ஒப்பீட்டளவில் அதிகரித்த வாய்ப்புக்களைக் கொண்ட ஓர் அறிக்கையாக வெளிவருவதற்கு உரிய வேலைகளை அரசாங்கம் கடந்த சில மாதங்களாக தீவிரமாகச் செய்துவந்தது.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது தன்னை தனிச்சிங்கள மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு வெற்றி பெற்ற ஓர் அரசாங்கமாகவே காட்டிக் கொண்டது. இதன்மூலம் ஏனைய தேசிய இனங்களை அது அவமதித்தது அல்லது புறக்கணித்தது.குறிப்பாக covid-19 சூழலுக்குள்ளும் முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரமாக செயற்பட்ட ஒரு அரசாங்கம் இது.எனவே இந்த அரசாங்கத்தின் ஆட்சிமுறையை தொகுத்துப் பார்க்கும்பொழுது ஜெனிவா கூட்டத்தொடரை அவர்கள் சினேக பூர்வமாக அணுகக் கூடிய வாய்ப்புகள் குறைவாகவே தென்பட்டன. குறிப்பாக கடந்த மார்ச் மாதம் ஜெனிவா கூட்டத்தொடரின் போது அரசாங்கம் முன்பு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தால் இணைஅனுசரணை வழங்கி நிறைவேற்றப்பட்ட நிலைமாறுகால நீதிக்குரிய தீர்மானத்துக்கான இணை அனுசரணைப் பணியிலிருந்து விலகப் போவதாக அறிவித்திருந்தது. அது ஏறக்குறைய ஐநாவோடும் மேற்கு நாடுகளோடும் மோதும் ஒரு நிலைமையைத்தான் காட்டியது.
ஆனால் அவ்வாறு அறிவித்த பின்னரும்கூட அரசாங்கம் ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் உருவாக்கப்பட்ட நிலைமாறுகால நீதிக்குரிய கட்டமைப்புகளை மூடவில்லை. அவற்றுக்கு வழங்கப்பட்ட விநியோகங்கள் குறைக்கப்பட்டன. அவற்றின் அந்தஸ்து குறைக்கப்பட்டது. கட்டமைப்புகள் நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன.எனினும் அவை மிகக்குறைந்த வளங்களோடு தொடர்ந்தும் இயங்க அனுமதிக்கப்பட்டன.இதை எனது கட்டுரைகளில் ஏற்கனவே பல தடவைகள் சுட்டிக்காட்டியிருக்கிறேன். அதைப்போலவே கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அரசாங்கம் நிலைமாறுகால நீதி கட்டமைப்புகளில் ஒன்றாகிய இழப்பீட்டு நிதிக்கான அலுவலகத்துக்கு அதிக நிதியை ஒதுக்கியது.இதன்மூலம் அரசாங்கம் நீண்ட எதிர்காலத்தில் ஐநாவை சுதாரிப்பதற்குத் திட்டமிடுகிறது என்பதனையும் நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன்.
அதன் பின் அண்மையில் கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ருவிற்றர் மூலம் ஐநாவுக்கு தூது விட்டார்.அதில் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் ராஜபக்சக்களின் யுத்த வெற்றிவாத அகராதியில் முன்னெப்பொழுதும் காணப்படாதவை. அவை பெரும்பாலும் ஐநா அல்லது சிவில் சமூகங்கள் அல்லது ஐ.என்ஜி.யோக்களால்அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகளாகும். அந்த வார்த்தைகளால் எழுதப்பட்ட ஒரு செய்தியை அவர் ருவிட்டர் மூலம் ஐநாவுக்கு அனுப்பினார்.அச்செய்தியை கூட்டமைப்பு ருவிற்றரில் வரவேற்றிருந்தது.
குறிப்பாக பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்துக்குள் கொண்டுவரப்பட்ட பின் ஏற்பட்ட மாற்றங்கள் அரசாங்கத்துக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான வெளியுறவுப் பரப்பில் நெகிழ்வுத்தன்மையை உருவாக்கின. அதில் ஒருவித சமரசப்பண்பு அதிகம் காணப்பட்டது. கடும்போக்குடைய தினேஷ் குணவர்தனவுக்கு பதிலாக மேற்கு நாடுகளால் ஆர்வத்தோடு பார்க்கப்படும் பேராசிரியர் பீரிஸ் புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதோடு இந்தியாவுக்கான புதிய மூலோபாய திட்டத்தோடு மிலிந்த மொரகொட டெல்லிக்கு அனுப்பப்பட்டார். இவற்றோடு அரசாங்கம் மேற்கத்தைய நிதி முகவர் அமைப்புகளான உலக வங்கி,பன்னாட்டு நாணய நிதியம் ஆகியவற்றிடம் உதவி கேட்டுப்போகத் தொடங்கியது.இவையாவும் மிகக் குறுகிய காலத்தில் இடம்பெற்றன. இவற்றுக்கு காரணம் என்ன?
முக்கிய காரணம் பொருளாதார நெருக்கடி. பொருளாதார நெருக்கடிக்கு காரணம் டெல்டா திரிபு. இதற்கு முந்திய இரண்டு பெரும் தொற்றலைகளையும் அரசாங்கம் ஒப்பீட்டளவில் சமாளித்தது. படையினரின் உதவியோடு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை படுவேகமாக முடுக்கிவிட்டது. எனினும் டெல்டா திரிபு முன்னெப்பொழுதும் இல்லாத சேதத்தை விளைவித்தது.அதுகூட எதிர்பாராதது அல்ல. அப்படி ஒரு சேதம் ஏற்படும் என்று ஏற்கனவே துறைசார் நிபுணர்கள் எச்சரித்திருந்தார்கள். அதற்கு இந்தியாவை உதாரணமாக காட்டியுமிருந்தார்கள்.ஆனாலும் யுத்தத்தை வென்ற படைத்தரப்பு வைரசையும் இலகுவாக தோற்கடித்து விடும் என்று அரசாங்கம் நம்பியது. தவிர வைரசை முடக்குவதற்காக நாட்டை முடக்கினால் பொருளாதாரம் படுத்து விடும் என்றும் அரசாங்கம் அஞ்சியது. எனவே துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளை புறக்கணித்தது. முடிவில் வைரஸ் பெரும் சேதத்தை விளைவித்தது. அந்த சேதமும் அரசாங்கம் தனது நிலைப்பாடுகளில் நெகிழ்வதற்கு ஒரு காரணம். தவிர ஐரோப்பிய யூனியன் ஆடைகளுக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை நிறுத்தப் போவதாக அறிவித்தது. அவ்வாறு ஜிஎஸ்பி பிளஸ் சலுகை நிறுத்தப்பட்டால் ஆடை ஏற்றுமதி துறை நட்டத்தில் விழக்கூடிய வாய்ப்புகளே அதிகம்.
இவ்வாறு ஒரு புறம் வைரஸ்,இன்னொருபுறம் சரியும் பொருளாதாரம், மூன்றாவது முனையில் அழுத்தத்தைப் பிரயோகிக்கும் மேற்கு நாடுகள். இவ்வாறாக மூன்று முனைகளிலும் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டியிருந்த ஒரு நிலையில் அரசாங்கம் பசில் ராஜபக்சவை முன்னிறுத்தி அரங்கினுள் வேகமாக மாற்றங்களை முன்னெடுத்து. அதன் விளைவுகளை கடந்த கிழமை ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பெற்றிருக்கிறது எனலாமா?
இக் கூட்டத்தொடரை முன்னிட்டு கடந்த 31ஆம் திகதி அரசாங்கம் ஐநாவுக்கும் கொழும்பிலுள்ள தூதரகங்களுக்கும் அனுப்பிய ஓர் அறிக்கையில் எனது கட்டுரையில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்ததுபோல கடந்த 20 மாதங்களில் தான் செய்து முடித்த; செய்யத் திட்டமிட்டு இருக்கின்ற வீட்டு வேலைகளை குறித்து விலாவாரியான ஒரு பட்டியலைத் அனுப்பியிருந்தது.அவை யாவும் ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க தொடக்கிவைத்த நிலைமாறுகால நீதி செயற்பாடுகளின் தொடர்ச்சிதான். அதில் அரசாங்கம் காட்டிய புள்ளிவிபரங்கள் பல செயற்கையானவை என்றும் அதில் கூறப்பட்ட தகவல்களில் உண்மைகள் இல்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டினர்.
அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் பொறுப்பான பதவியில் இருக்கும் எனது நண்பர் ஒருவர் அந்த அறிக்கையை சுட்டிக்காட்டி என்னிடம் பின்வருமாறு கேட்டார்” இந்த அறிக்கையில் இருக்கும் பல தகவல்கள் ஜோடிக்கப்பட்டவை என்பது மேற்கத்திய தூதரகங்களுக்கும் நன்கு தெரியும். ஏன் அரசாங்கம் இப்படி ஓர் அறிக்கை அனுப்பவேண்டும் ?” என்று.உண்மை. அந்த அறிக்கையின் நம்பகத் தன்மையை ஐநாவும் மேற்கு நாடுகளும் ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் அந்த அறிக்கையில் கூறப்பட்ட விடயங்களின் மெய்த்தன்மையில் மட்டும் தங்கி இருக்கவில்லை. மாறாக அவை அரசாங்கம் மேற்கு நாடுகளை எந்தளவுக்கு சுதாரிக்க முயல்கிறது என்பதில்தான் தங்கியிருக்கின்றன.என்று அவருக்கு நான் சொன்னேன். இப்பொழுது வந்திருக்கும் ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை அதைத்தான் நிரூபித்திருக்கிறது. அதாவது அந்த அறிக்கையில் அரசாங்கம் தான் செய்து முடித்ததாக சுட்டிக்காட்டும் வீட்டு வேலைகளை ஐநா நம்புவதா இல்லையா என்பதை இறுதியிலும் இறுதியாக தீர்மானிக்கப் போவது அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களின் நம்பகத்தன்மை அல்ல. மாறாக அரசாங்கத்துக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான வெளிவிவகார அணுகுமுறைதான்.
அந்த அணுகுமுறை ஒப்பீட்டளவில் வெற்றி பெற்றிருக்கிறது என்பதனை மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை நமக்கு காட்டுகிறதா? அரசாங்கத்தின் அறிக்கையில் இருந்து பல விடயங்களை அவர் கவனத்தில் எடுத்திருக்கிறார்.சில விடயங்களில் அவர் பாதிக்கப்பட்ட மக்களின் நோக்கு நிலையில் இருந்து கருத்து கூறியிருந்தாலும் கூட அந்த அறிக்கை கடந்த மார்ச் மாத அறிக்கையோடு ஒப்பிடுகையில் அரசாங்கம் சுதாகரித்துக் கொள்வதற்குரிய அதிகரித்த வாய்ப்புக்களை கொண்டிருக்கிறது என்பதே உண்மை.
இதில் அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலான விடயம் எதுவென்றால் தகவல்களை திரட்டுவதற்கான ஒரு பொறிமுறை பற்றிய குறிப்புகள்தான். ஆணையாளரின் அறிக்கையின் இறுதிப் பகுதியில் அதைக் காணலாம். கூர்மையற்ற வார்த்தைகளால் குறிப்பிடப்படும் அப்பொறிமுறை விரைவில் இயங்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.அப்பொறிமுறை பற்றிக் கிடைக்கும் தகவல்களின்படி அது கடந்த ஜனவரி மாதம் மூன்று கட்சிகள் கூட்டாக கேட்ட ஒரு பொறிமுறை போன்றதல்ல என்று தெரிகிறது. கடந்த ஜனவரி மாதம் 3 கட்சிகள் கூடி ஒரு பொதுக் கடிதத்தை ஜெனிவாவுக்கு அனுப்பின. அதில் அவர்கள் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்குமாறு கேட்டிருந்தனர்.புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவும் அதனை வலியுறுத்தின. அப்படி ஒரு பொறிமுறையை தமிழ் மக்கள் தாங்களாக உருவாக்க முடியாது என்றும் அதற்கு பிரமாண்டமான நிதி தேவைப்படும் என்றும் அரசுகளால்தான் அந்த நிதியை கொடுக்க முடியும் என்றும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் சில வாதிட்டன.
மூன்று கட்சிகளும் இணைந்து ஐநாவுக்கு ஒரு கடிதத்தை அனுப்புவது தொடர்பான உரையாடல்களின் போது விக்னேஸ்வரனின் தமிழ்தேசிய மக்கள் கூட்டணியைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் அப்படி ஒரு பொறிமுறையை தொடர்ச்சியாக வலியுறுத்தினார்.ஆனால் கஜேந்திரகுமார் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.முடிவில் கிளிநொச்சியில் நடந்த சந்திப்பில் கஜேந்திரகுமார் அப்பொறிமுறையை நிபந்தனையோடு ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தார்.அதன்படி பொறிமுறைக்கு காலஎல்லை வரையறுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அக்கடிதம் ஜனவரி 21 ஆம் திகதி அனுப்பப்பட்டது.
எனினும் அக்கடிதத்தில் மூன்று கட்சிகளும் கேட்ட ஒரு பொறிமுறையை கடந்த மார்ச்மாத தீர்மானத்தில் ஐநா பரிந்துரைக்கவில்லை. மியான்மரிலும் சிரியாவிலும் உருவாக்கப்பட்டது போன்ற ஓர் அனைத்துலக விசாரணைப் பொறிமுறையைத்தான் தமிழ் கட்சிகள் கேட்டிருந்தன.ஆனால் ஐநா தமிழ் மக்களுக்கு பரிந்துரைத்த பொறிமுறையானது முன்பு லத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவாக்கப்பட்ட தகவல் திரட்டும் செயலகத்தை ஒத்தது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
அப்படி ஒரு செயலகத்தை உருவாக்குவதற்கும்கூட இலங்கை அரசாங்கத்திற்கு சார்பான சீனா போன்ற நாடுகள் விரும்பவில்லை என்று தெரிகிறது. அதற்கான நிதியை குறைக்கும்படியும் அதற்காக நியமிக்கப்படும் நிபுணர்களின் எண்ணிக்கையை குறைக்கும்படியும் அந்த செயலகத்தால் விசாரிக்கப்பட உள்ள காலப் பரப்பை குறைக்கும்படியும் சீனா அழுத்தங்களை பிரயோகிப்பதாக ஒரு தகவல் உண்டு. கடந்த கிழமை ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கையின்படி அந்த செயலகம் விரைவில் இயங்கும் என்று தெரிகிறது.ஏற்கனவே அதற்குரிய நிதியை பிரித்தானியாவும் ஆஸ்திரேலியாவும் வழங்கியிருந்தன.ஏனைய நாடுகளையும் உதவி செய்யுமாறு மனித உரிமைகள் ஆணையர் கேட்டிருக்கிறார்.
ஆனால் அந்த செயலகத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்து விட்டது.கடந்த 31ஆம் திகதி அனுப்பிய அறிக்கையிலும் அது நிராகரிக்கப்பட்டிருந்தது.ஐநா மனித உரிமைகள் ஆணையரின் வாய்மூல அறிக்கைக்கு அமைச்சர் பீரிஸ் வழங்கிய மறுமொழியிலும் அது நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ஆயின் அரசாங்கத்தின் சம்மதமின்றி நாடு கடந்த நிலையில்தான் அது இயங்க வேண்டியிருக்கும்.
எனவே ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தும் செய்தி என்னவென்றால் ஓர் அரசுடைய தரப்பாக இலங்கை அரசாங்கம் அரசுகளையும் அரச சார்பற்ற நிறுவனங்களையும் உலக நிறுவனங்களையும் வெற்றிகரமாக கையாண்டு வருகிறது என்பதுதான்.தான் நிராகரித்த ஒரு நிலைமாறுகால நீதி பொறிமுறையை ஐநா பரிந்துரைத்த ஒரு வடிவத்திலன்றி ராஜபக்சக்கள் பாணியிலான ஒரு வடிவத்தில் முன்னெடுக்க தயார் என்ற செய்தியை அரசாங்கம் ஐநாவுக்கு கூறிவிட்டது.
அதேசமயம் சான்றுகளை திரட்டுவதற்கான செயலகம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஐநாவோடு ஏதாவது ஒரு சுதாகரிப்புக்கு போகுமா அல்லது அதை முன்வைத்து பெருந்தேசியவாதத்தை அப்டேற் செய்யுமா? என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.ஒரு அரசுடைய தரப்பாக இது போன்ற நிலைமைகளை கையாளத்தக்க நிறுவனங்களையும் நிபுணத்துவ ஆற்றல்களையும் அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதனை தமிழ்மக்கள் தொகுத்துப் பார்க்க வேண்டும். அவ்வாறான கட்டமைப்புகளும் ஒருமித்த முடிவுகளும் ஒன்றிணைந்த செயற்பாடுகளும் தமிழ்மக்கள் மத்தியில் இல்லை என்பதனையும் தமிழ் மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.