தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் ஏற்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இரகசியமாக நடத்திய கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) சபையில் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை 10 ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் (M.A. Sumanthiran) ஏற்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இரகசியமாக அண்மையில் நடத்திய கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
எப்போதும் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகவே செயற்படும் இத்தகைய குழுவின் பேச்சுவார்த்தையானது நாட்டுக்கு நன்மை பயப்பதாக ஒருபோதும் அமைய முடியாது. மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதை அதைரியப்படுத்தும் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சி ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டின் பொருளாதாரம் பற்றியும் அதனை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) சபையில் தெரிவித்தார்.
இன்று நீங்கள் கூறுவதை ஏன் உங்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் அதனை நடைமுறைப் படுத்தவில்லை என்பதே எமது கேள்வியாகும். நாட்டின் பொருளாதார நெருக்கடி 2015 ஆம் ஆண்டு நடுப்பகுதியிலேயே ஆரம்பித்துவிட்டது.
2014 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை சிறந்த பொருளாதார பின்னணியை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நாட்டில் முன்னெடுத்திருந்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஒரே வருடத்தில் இரண்டு முறை மத்திய வங்கி நிதி மோசடி இடம்பெற்று நாட்டின் முழுமையான பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்தது.
அரசாங்கம் அனைத்து நெருக்கடிகளிலிருந்தும் நாட்டை மீட்டெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) ஜனாதிபதியாக பதவி வகிப்பது நாட்டின் பெரும் அதிர்ஷ்டமாகும். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இந்த தொற்று ஏற்பட்டிருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.