ஊடகவியலாளர் சமுதிதவின் வீடுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து, குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரமவின் வீடுமீது ஆயுதம் தாங்கிய நபர்களால், நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
நாட்டில் ஊடக சுதந்திரத்துக்கு இவ்வாறு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் நபர்களை பாதுகாப்பதே இத்தகைய தாக்குதல்களின் நோக்கம் என்பது தெளிவாகின்றது.
ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து,† நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி ëகறுப்பு ஜனவரிí நினைவுகூரப்பட்டு ஒரு மாதம் நிறைவடைவதற்குள் இத்தகையதொரு தாக்குதல் இடம்பெற்றுள்ளமை ஊடக சமூகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.
ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக கடந்த காலங்களில் குற்றங்கள் இழைத்தவர்கள் இன்னும் சட்டத்தின்முன் நிறுத்தப்படாமல், சுதந்திரமாக உலா வருவதும் இப்படியான தாக்குதலுக்கு ஆசிர்வாதமாக அமைவதாக எமது சங்கம் கருதுகின்றது.
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரவின் வீடுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து, குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.