அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தும் அமைச்சுக்களின் செயலாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட ஏறக்குறைய 140 உயர் அதிகாரிகள் குறித்து உளவுத் துறையினர் அரசாங்க உயர் அதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுப்பதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
சில அதிகாரிகள், அமைச்சகங்களின் வாகனங்களை உத்தியோகபூர்வ பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதாகக் கூறி, குழந்தைகளை பாடசாலைக்கு ஏற்றிச் செல்வது புகைப்படங்களுடன் உளவுத்துறை தகவல்கள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்க வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பல தலைவர்களை ஒழுங்குமுறை அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.
அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் என்பன வாகனங்களை முறைகேடாக பயன்படுத்துவதால் வருடாந்தம் 2 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் வீணடிக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான அறிவித்தல் எதுவும் வெளியிடப்படவில்லை என அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக இந்த வேலைத்திட்டத்தை தற்போது நடைமுறைப்படுத்த முடியாது என நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.