பிரிட்டன் தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களுக்கு எதிராக பைஸர் கொரோனா தடுப்பு மருந்து சிறப்பாக செயல்படுவதாக ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களும் வேகமாக பரவுத் தன்மை கொண்டதாகவே உள்ளன. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் 44 நாடுகளிலும் பிரேசிலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் 15 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது.
மேலும் பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் பரவும் கொரோனா வைரஸ் விரைவாக உருமாற்றம் அடைவதால் அவை உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக உலக நாடுகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் பலரும் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்க கரோனா வைரஸுகளுக்கு எதிராக பைஸர் கொரோனா தடுப்பு மருந்து சிறப்பாக செயல்படுவதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக ஆய்வாளர்கள் தரப்பில்இ ‘ பைஸர் கொரோனா தடுப்பு மருந்தின் இரு டோஸ்கள் புதிய வகை கொரோனா வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயலாற்றுக்கின்றன. எதிர்ப்பு சக்தியை தூண்டுகின்றன. ஒரு டோஸ் பைஸர் தடுப்பு மருந்து பிரிட்டனில் தோன்றிய புதிய வகை கரோனாவுக்கு எதிராக சிறந்த பலனை அளிக்கின்றது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.