உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை நாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (28) பிற்பகல் கொட்டாஞ்சேனை புனித லுசியா பேராலயத்தில் வைத்து குறிப்பிட்டார்.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டத்தில் இணைந்து கொண்டிருந்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பிரதமர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களினால் இதன்போது நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான குடியிருப்பில் 19 பயனாளிகளுக்கு இவ்வாறு வீடுகள் கையளிக்கப்பட்டன.
வாடகை அடிப்படையிலும் குறைந்த வருமானம் பெறுவோர் என்ற அடிப்படையிலும் தெரிவுசெய்யப்பட்ட 33 பயனாளி குடும்பங்களுக்கு இவ்வாறு புதிய வீடுகள் கையளிக்கப்படவுள்ளதுடன், ஒவ்வொரு வீடுகளினதும் மதிப்பு 4 மில்லியன் ரூபாயாகும்.
அருட்தந்தை ஜே.டீ.அந்தனி ஆண்டகை மற்றும் அருட்தந்தை அன்டன் ரஞ்சித் ஆண்டகை, நகர அபிவிருத்தி, கழிவுப்பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பிரதமர் ஆற்றிய முழுமையான உரை, அன்று கொட்டாஞ்சேனை குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தினால் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம். நம்மால் தாமதிக்கப்பட்டிருப்பினும், அம்மக்களுக்கான பொறுப்பை நிச்சயமாக நிறைவேற்ற நாம் தயார்.
ஏனெனில் அவர்கள் எத்தகைய நிலையில் காணப்படுவார்கள் என்பதை நாம் அறிவோம். இதேவேளை, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். மக்களுக்கு நிம்மதியாய் வாழவும் சுதந்திரமாக பயணிக்கவும், தமது மதத்தை பின்பற்றவும் கோவிலுக்கு, பள்ளிக்கு, விகாரைக்கு சென்று வருவதற்கான உரிமை இருக்க வேண்டும்.
அந்த உரிமையை பாதுகாப்பது போன்றே மத சுதந்திரத்தை அனுபவிக்க, அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் அவர்களின் மதத்தை பின்பற்ற அனுமதிக்க வேண்டும். அவ்வாறாயின் அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதனை எமது கடமையாக நாம் கருதுகின்றோம். அதனால் இம்மக்களுக்காக எமது கடமையை நிறைவேற்றுவதற்கு போன்றே இதில் கலந்து கொள்ள கிடைத்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
குறிப்பாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களை சந்திக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர் நினைவுபடுத்தும் ஒரு விடயம், அன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதாகும். எம்மால் நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்பதை நான் மிகத் தெளிவாக கூற விரும்புகிறேன்.
அதேபோன்று அவ்வாறானதொரு நிலைமை எதிர்காலத்தில் நிகழாதிருப்பதனை உறுதிசெய்வது எமது பொறுப்பாகும். அதற்காக நாம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். அரசாங்கத்தனை பொறுப்பேற்றவுடன் வீடற்றவர்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுப்பதும் எமது கடமையாகும். அதனால் அந்த பயனாளிகளுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தையும் நாம் செயற்படுத்துவோம் என்பதை நினைவுபடுத்துகிறேன்.
நாம் ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவோம். இந்த நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்தோம். அன்றைய காலகட்டத்தில் சுமார் 27 முதல் 30 வருடங்களாக இந்த நாட்டில் பயங்கரவாதத்தால் மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் என்பதை நாம் அறிவோம். எனவே, ஆட்சிக்கு வந்த மூன்றாண்டுகளில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முடிந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே, எதிர்காலத்தில் பயங்கரவாதத்திற்கு இடமளிக்காமல் சுதந்திரமாக வாழவும், மதத்தை பின்பற்றவும் நாம் நடவடிக்கை எடுப்போம் என்பதை நாட்டு மக்களுக்கு நினைவூட்ட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளையும், அவர்களுக்கான பிற கடமைகளையும் நிறைவேற்றுவது எமது பொறுப்பாகும். எனவே, அதனை எவ்வித சமரசமும் இன்றி நிறைவேற்றுவோம் என்பதையும் நினைவூட்டுகின்றேன்.
ஒரு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் மத, இன பாகுபாடின்றி செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். எனவே இத்தருணத்தில் உங்களுக்கு ஏதாவது வழங்கப்பட வேண்டியிருப்பின், அதை வழங்குவது எங்கள் பொறுப்பு. இத்தேசத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். இன, மத பேதமின்றி வாழ்வதற்கான பின்னணி ஏற்படுத்ப்பட வேண்டும். அதேபோன்று நாட்டின் அபிவிருத்திக்காகவும் நாம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இன்று வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்ற பாகுபாடின்றி நாடு பூராவும் சமமாக எமது அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம் என்பதை புதியதாக கூற வேண்டியதில்லை. அந்த அபிவிருத்தியுடன் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம். எங்கள் கடமையைச் செய்ய நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம் என்பதை நினைவூட்டுவதுடன் உங்கள் அனைவருக்கும் வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார்.
குறித்த நிகழ்வில் நகர அபிவிருத்தி, கழிவுப்பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய நாணயக்கார, பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, பயனாளி குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.