சிங்கப்பூர் நாட்டின் குடிவரவு மற்றும் சோதனைச்சாவடிகள் அதிகார சபையின் அதிகாரிகள் எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் நேற்று(06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,”இலங்கை, சிங்கப்பூர் போல் மாற வேண்டும் என்று கனவு கண்டால் மாத்திரம் போதாது அதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.
இலங்கையின் விமான நிலைய கட்டமைப்பு,குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டமைப்பை பரிசீலனை செய்து சிறந்த திட்டங்களை முன்வைக்குமாறு சிங்கப்பூர் நாட்டின் குடிவரவு சோதனைச்சாவடிகள் அதிகார சபையிடம் வலியுறுத்தினேன்.
இதற்கமைய இலங்கையின் விமான நிலையங்கள்,குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டமைப்பு ஆராய்வதற்கு சிங்கப்பூர் நாட்டின் குடிவரவு சோதனைச்சாவடிகள் அதிகார சபையின் ஐந்து அதிகாரிகள் எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்கள்.இவர்கள் எதிர்வரும் ஜூன் மாதம் வரை தங்கியிருந்து ஆராய்வுகளை முன்னெடுப்பார்கள்.
சிங்கப்பூர் போல் மாற வேண்டும் என்று கனவு கண்டுக் கொண்டிருந்தால் மாத்திரம் போதாது அதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.சிங்கப்பூர் அதிகார சபை குழுவினர் முன்வைக்கும் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.”என கூறியுள்ளார்.