எதிர்வரும் 11ஆம் திகதி இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலை இந்திய கடற்படை கண்காணித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் செயற்கைக் கோள்கள், ரொக்கெட்டுகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் போன்றவற்றை கண்காணிக்கும் நவீன கருவிகளைக் கொண்ட இந்தக் கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து இந்தியா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் விண்வெளி செயற்கைக்கோள் நடவடிக்கைகளை கண்காணிக்க வரும் கப்பல் (யுவான் வாங் – 5) இம்மாதம் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ளது.
இதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் குறித்த கப்பல் நங்கூரமிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக் கப்பல் 750 கிலோமீட்டருக்கும் அதிகமான வான்வழி அணுகல் கண்காணிப்பு திறனைக் கொண்டுள்ளது, எனவே இது தென்னிந்தியாவில் உள்ள கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் போன்ற இந்திய அணு ஆராய்ச்சி மையங்களைக் கண்காணிக்கும் திறன் கொண்டதென இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமல்லாது கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட துறைமுகங்கள் உட்பட சீனாவால் கண்காணிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், இந்தியாவின் பல இடங்களில் இருந்து தகவல்களை சேகரிக்க சீனாவுக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.