நாட்டில் குடிநீர் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் உணவகங்களை நடத்துவதில் பல சிக்கல்கள் ஏற்படுவதாகவும் உணவகம் ஒன்றிற்குச் சென்றால் குடிக்கும் ஒரு கிளாஸ் தண்ணீருக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டிய சூழ்நிலையை அரசாங்கம் உருவாக்கி இருப்பதாக உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (03-08-2023) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அசேல சம்பத் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கைகளை கழுவவும், தண்ணீர் குடிக்கவும், கழிவறையை பயன்படுத்தவும், உணவு கழுவுதல் மற்றும் சமைப்பது மட்டுமின்றி, ஊழியர்களின் தேவைக்காகவும் தண்ணீர் பயன்படுத்தப்படுவதாக தலைவர் கூறுகிறார்.
இதனால், உணவுப் பொருட்களை கழுவுவதை குறைக்க வேண்டும், வாடிக்கையாளர் பயன்படுத்தும் தண்ணீர் கோப்பைக்கு கூட கட்டணம் வசூலிக்க வேண்டும், உணவகங்களில் உள்ள கழிவறைகளை கூட மூட வேண்டிய நிலை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இதேவேளை, உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலை அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.