சமூக மட்டத்தில் தற்போது தோற்றம் பெற்றுள்ள ஒருசில பிரச்சினைகள் பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஒருபோதும் தடையாக அமையாது. தேசிய பாதுகாப்பு மற்றும் தேசியம் ஆகியவற்றை கருத்திற் கொண்டே மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தை உருவாக்கினார்கள் என அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டும் பொதுஜன பெரமுனவே ஆட்சியமைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிலைப்பேறான விவசாய கொள்கையின் இலக்கினை அடையும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிமுகப்படுத்திய சேதன பசளை திட்டத்திற்கு ஒரு தரப்பினர் ஆரம்பத்திலிருந்து திட்டமிட்ட வகையில் போலியான பிரசாரங்களை முன்னெடுத்தார்கள்.
சேதன பசளையினை பயன்படுத்தாத விவசாயிகள் அத்திட்டத்திற்கு எதிராக கருத்துரைப்பதை அவதானிக்க முடிகிறது.
சேதன பசளை ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள சிறந்த விளைச்சலையும்,சேதன பசளை திட்டத்தின் முக்கியத்துவத்தையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் பொறுப்பு வாய்ந்த தரப்பினர் தவறிழைத்துள்ளார்கள்.
விவசாயத்துறையின் தற்போதைய நிலைமை இன்னும் 6 மாத காலத்திற்குள் சீர்செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அரசாங்கங்களை காட்டிலும் தற்போதைய அரசாங்கம் விவசாயிகளின் நலன் குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளது.
நெல்லுக்கான உத்தரவாத விலையை 75 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணமாகும்.
சமூக மட்டத்தில் தற்போது தோற்றம் பெற்றுள்ள ஒருசில பிரச்சினைகள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு நாட்டு மக்கள் 2024 ஆம் ஆண்டும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிப்பார்கள். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மூன்றாக பிளவுபடும்.
ஒரு தரப்பினர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் பக்கமும், பிறிதொரு தரப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பக்கமும், மிகுதியான தரப்பினர் ஐக்கிய தேசிய கட்சி பக்கமும் ஒன்றிணைவார்கள் என்றார்.