இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அவருடைய கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன ஒரு இடதுசாரி கட்சியாக அறியப்பட்டதால், அவர் இந்தியாவைவிட சீனாவுடன் கூடுதல் நெருக்கம் காட்டுவாரா?
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் (Jathika Jana Balawegaya) வேட்பாளரான அநுர குமார திஸாநாயக்க தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். ஜனதா விமுக்தி பெரமுனவைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்படுவார் என பத்தாண்டுகளுக்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால், அதை ஒருவர்கூட நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் அரசியல் அதிசயங்களுக்கு பெயர் போன இலங்கையில் இப்படி நடப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.
தேசிய மக்கள் சக்திக்கு தலைமையேற்றுள்ள ஜனதா விமுக்தி பெரமுன கட்சித் தலைவரான அநுர குமார திஸாநாயக்க, இரண்டாவது இடம் பிடித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைவிட, சுமார் 12 லட்சத்து 9 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார்.
38 பேர் களத்தில் நின்ற இந்தத் தேர்தலில், புதிய ஜனாதிபதியைத் தேர்வுசெய்ய விருப்ப வாக்குகளையும் எண்ணவேண்டி வந்தது. இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை வந்த பிறகு, விருப்ப வாக்குகள் எண்ணப்படுவது இதுவே முதல் முறை.
அதேபோல, இலங்கையின் வரலாற்றில் ஒரு இடதுசாரி தலைவர் ஜனாதிபதியாக பதவியேற்பதும் இதுவே முதல் முறை. இந்த நிலையில், இலங்கைக்கு அருகில் உள்ள பிராந்திய சக்திகளான இந்தியாவையும் சீனாவையும் புதிய ஜனாதிபதி எப்படி அணுகுவார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இடதுசாரி சாய்வு கொண்டவர் என்பதால், இயல்பாகவே இந்தியாவைவிட சீனாவுடன் கூடுதல் நெருக்கத்தைக் காட்டக்கூடும் என்பதுதான் பொதுவான புரிதல். இந்தியாவின் இலங்கை குறித்த கொள்கையை ஜனதா விமுக்தி பெரமுன நீண்ட காலமாக விமர்சித்து வருகிறது. ஒருவித ஆதிக்க மனோபாவத்துடனேயே இலங்கையை இந்தியா அணுகுவதாக குற்றம்சாட்டியும் வந்தது.
சமீபத்திய ஆண்டுகளில் இதுபோன்ற பேச்சுகள் இல்லை என்றாலும் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் இறுதிக் கட்டத்தில், செப்டம்பர் 16ஆம் தேதியன்று ஒரு அரசியல் விவாத நிகழ்ச்சியில் இந்தியா பற்றிய அவரது பேச்சு கவனிக்கத்தக்கதாக இருந்தது. தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் இலங்கையில் அதானி குழும முதலீட்டில் உருவாகும் காற்றாலை மின் திட்டம் ரத்து செய்யப்படும் என்றார். அந்தத் திட்டம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்று அவர் குறிப்பிட்டார். இவையெல்லாம் சேர்ந்து, அநுரவை இந்தியாவுக்கு சாதகமற்ற ஜனாதிபதி என்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
இந்த விவகாரத்தில் இந்தியா ஆரம்பத்தில் இருந்தே ஜாக்கிரதையாக இருந்துவருகிறது. ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்துவந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கைக்கான இந்தியத் தூதர் சந்தோஷ் ஜா, “நாங்கள் எந்த வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை. புதிதாக தேர்வுசெய்யப்படும் ஜனாதிபதியுடன் பணியாற்ற நாங்கள் விருப்பத்துடன் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் புதிய ஜனாதிபதியாகத் தேர்வுசெய்யப்பட்ட அநுர குமார திஸாநாயக்கவை, நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார் சந்தோஷ் ஷா.
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவ
சமீபத்தில்தான் வங்கதேசத்தில், ஆட்சி மாற்றம் நடந்திருக்கும் நிலையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியா ஜாக்கிரதையாகவே செயல்படவிரும்புகிறது. உண்மையில், சில மாதங்களுக்கு முன்பாகவே, அநுர குமாரவை தில்லிக்கு அழைத்து இந்திய அதிகாரிகள் சந்திப்புகளை நடத்தினார்கள், ஆகவே இந்தியாவின் கவனத்தில் அவர் எப்போதுமே இருந்தார் என்கிறார் லயோலா கல்லூரியின் பேராசிரியரான கிளாட்ஸன் சேவியர்.
“இந்தியாவைப் பொருத்தவரை, அநுர குமார திஸாநாயக்கவை கண்டுகொள்ளாமல் விடவில்லை. இந்த ஆண்டு பிப்ரவரியில் அவர் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டார். முக்கியமான தலைவர்களை அவர் சந்தித்துப் பேசினார். பஞ்சாப் மாநிலத்திற்குச் சென்று அங்கேயும் பலரை சந்தித்தார். பொதுவாக இந்திய எதிர்ப்பு மனநிலை கொண்ட கட்சியாக அறியப்படும் ஜனதா விமுக்தி பெரமுனவோடு தொடர்புகொண்டு இந்தியா செயல்பட்டது இதுவே முதல் முறையாகவும் இருந்தது” என்கிறார் கிளாட்ஸன் சேவியர்.
1980களில் ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு இந்தியா குறித்து இருந்த பார்வை தற்போது மாறிவிட்டது என்கிறார் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி அகிலன் கதிர்காமர்.
“ஜனதா விமுக்தி பெரமுனவைப் பொருத்தவரை, அது பழைய ஜே.வி.பி. இல்லை. அது ஒரு மையவாதக் கட்சியாக மாறிவிட்டது. ஆனால், ரணில் விக்ரமசிங்கவைப் போல முழுமையான இந்தியச் சாய்வு கொண்டவராக அவர் இருப்பார் என சொல்ல முடியாது. ஆனால், எந்த நாட்டிற்கும் மிகவும் நெருக்கமாகவோ, விரோதமாகவோ இல்லாத ஒரு நிலையைத்தான் அவர் எடுப்பார் எனக் கருதுகிறேன். இலங்கை இன்னமும் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. இந்தத் தருணத்தில் அதீதமான நிலைப்பாடுகளை எடுப்பது சரிவராது என்பதை அவர் புரிந்துகொண்டிருப்பார் எனக் கருதுகிறேன்.” என்கிறார் அகிலன் கதிர்காமர்.
2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 442 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் காற்றாலைகளை அமைக்க, இந்தியாவைச் சேர்ந்த அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு இலங்கையின் முதலீட்டு வாரியம் அனுமதி அளித்தது. ஆனால், சுற்றுச்சூழல் பிரச்னைகள், இந்த காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின்சாரம் கூடுதல் விலைக்கு இலங்கை மின்வாரியத்திற்கு விற்கப்படும் என்ற கவலைகளால் ஆரம்பத்திலிருந்தே இந்தத் திட்டம் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது.
தேர்தல் பிரசாரத்தின்போது அதானியின் காற்றாலை மின்திட்டத்திற்கு எதிராகப் பேசியதை வைத்தே, அவர் இந்தியாவுக்கு எதிரான அணுகுமுறையைக் கொண்டிருக்கலாம் என குறிப்பிடப்படுகிறது. அது சரியான பார்வையல்ல என்கிறார் கொழும்பு பல்கலைக் கழகத்தின் கௌரவப் பேராசிரியர் ஜெயதேவா உய்யங்கொட.
“அநுர குமார திஸாநாயக்கவைப் பொருத்தவரை இலங்கையில் இந்தியாவின் பங்கு குறித்த நிதர்சனத்தை ஏற்றுக்கொள்வார் எனக் கருதுகிறேன். மற்ற பிராந்திய சக்திகளையும் அவர் எதிர்கொள்ள வேண்டும். அதானி திட்டத்தைப் பொருத்தவரை, பொருளாதார ரீதியாகவும் சூழல் ரீதியாகவும் அது மிகப் பெரிய சர்ச்சைக்குள்ளான விவகாரம். மோதியும் அதானியும்தான் அந்தத் திட்டம் குறித்து மறு பரிசீலனை செய்யவேண்டும்.” என்கிறார் ஜெயதேவா உய்யங்கொட.
இதே கருத்தையே முன்வைக்கிறார் அகிலன் கதிர்காமர். “அதானியின் காற்றாலை மின் திட்டத்தைப் பொருத்தவரை, அது இந்தியாவின் திட்டம் என்பதற்காக எதிர்க்கப்படவில்லை. இந்தத் திட்டம் தொடர்பாக ஜே.வி.பி. மட்டுமல்ல, மற்றவர்களாலும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அந்தத் திட்டம் தொடர்பாக பல சூழலியல் ரீதியான, பொருளாதார ரீதியான விமர்சனங்கள் உள்ளன. அந்த ஒரு விவகாரத்தை வைத்து மட்டும் ஜே.வி.பி. – இந்தியா உறவை தீர்மானிக்க முடியாது. அவர் இந்தியாவுடன் அனுசரணையுடன் இருப்பார் என்றே கருதுகிறேன்” என்கிறார் அவர்.
இலங்கையின் Department of External Resources அளிக்கும் தகவல்களின்படி பார்த்தால், இலங்கைக்கு கடன் அளித்த நாடுகளில் சீனா முதலிடத்திலும் ஜப்பான் இரண்டாம் இடத்திலும் இந்தியா மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.
இம்மாதிரியான தருணத்தில் இந்தியாவை உதாசீனம் செய்வது போன்ற சிக்கலான சூழலை அவர் ஏற்படுத்த மாட்டார் என்கிறார் கிளாட்ஸன். “அநுரவைப் பொருத்தவரை இந்தியத் திட்டங்கள் மீது விமர்சனங்களை முன்வைக்கிறார். ஆனால், சீனாவைப் பற்றி விமர்சிப்பதில்லை. எனவே அவரிடம் ஒருவிதமான பாரபட்சம் இருக்கிறது என்று சொல்லலாம். இருந்த போதும் இலங்கை இன்னமும் பொருளாதார நெருக்கடியில்தான் இருக்கிறது. இந்தியா அளிக்கும் நிதியுதவி அந்நாட்டிற்குத் தொடர்ந்து தேவைப்படும். பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது உடனடியாக நிதியுதவி செய்தது இந்தியாதான். இந்த விஷயங்களை புதிய ஜனாதிபதி மனதில் கொள்வார் என கருதுகிறேன். இந்தியாவைத் தவிர்த்துவிட்டு, ஒரு சிக்கலான சூழலுக்கு நாட்டை இட்டுச்செல்ல மாட்டார்” என்கிறார் கிளாட்ஸன் சேவியர்.
இந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் சஜித்திற்கு கூடுதல் வாக்குகள் கிடைத்திருப்பதை சுட்டிக்காட்டும் ஜெயதேவா, “தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு அதிகாரப் பகிர்வை அளிப்பது குறித்து அநுர குமார திஸாநாயக்க சிந்தித்தாக வேண்டும்” என்கிறார்.