கொழும்பு றோயல் கல்லூரி கிரிக்கெட் அணியின் சிறந்த தலைமைத்துவமே இறுதி வெற்றிக்கு வழிவகுத்திருந்தாகவும் அதுபோன்று தோற்கடிக்கப்பட்ட இலங்கையை கிரிக்கெட் அணியின் தலைவரை போன்று வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வதே தமது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
அரலியகஹா மன்றில் நடைபெற்ற 32வது இன்டராக்ட் மாவட்ட மாநாட்டில் இன்றைய தினம் (19-03-2023) முற்பகல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, எரிபொருள், உரம், உணவுத் தட்டுப்பாடு உள்ளிட்ட பல கடுமையான நெருக்கடிகளுடன் கடந்த ஜூலை மாதம் நாட்டைப் பொறுப்பேற்றதையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்திருந்தார்.
இலங்கையை இனி மீட்க முடியாது என பலர் நினைத்திருந்ததாகவும் இருப்பினும் கடந்த 7 மாதங்களில் நாட்டில் நிலைமையை மாற்றி பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தனது அணியால் முடிந்ததாக ரணில் விக்கிரமசிங்க பெருமிதம் வெளியிட்டிருந்தார்.
இலங்கை இனி வங்குரோத்து நாடாக இல்லை என தெரிவித்த ஜனாதிபதி எதிர்வரும் இரண்டு வருடங்களில் அபிவிருத்தியடைந்து வரும் நாட்டை அனைவரும் காண முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை நாட்டினை இந்த பிராந்தியத்தில் மிகவும் வளமான நாடாக மாற்றுவதற்கு பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தினால் மட்டும் போதாது எனவும், அதற்கு பொருளாதாரமும் அவசியம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
2048ஆம் ஆண்டில் இலங்கையை வளமான நாடாக மாற்றுவதற்காக 25 வருட கால திட்டங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதைய இளைஞர்களின் அர்ப்பணிப்புடன் மட்டுமே அதனை அடைய முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.