இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவித்து வரும் நிலையில், அந்நாட்டிற்கு இந்தியாவுடன் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
டோக்கியோவில் கடந்த செவ்வாய்கிழமை குவாட் உச்சிமாநாட்டைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஃபியுமியோ கிஷிடா மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இலங்கைக்கான உதவிகளை வழங்குவது தொடர்பில் மேற்படி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது திறந்த மற்றும் சுதந்திரமான இந்திய – பசுபிக் பிராந்தியத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள், பாதுகாப்பு, தூய வலுசக்தி மற்றும் முதலீடு உள்ளடங்கலாகப் பல்வேறுபட்ட துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இலங்கையின் நிலைவரம் தொடர்பில் கலந்துரையாடுமாறும், இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் மிக மோசமடைந்துவரும் மக்களின் வாழ்க்கைநிலை ஆகியவற்றுக்கு மத்தியில் இவ்விடயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்துமாறும் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் அரச தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
சுமார் அரை நூற்றாண்டுகளுக்கும் அதிகமான காலமாக இலங்கைக்கான உதவி வழங்குனர்களிலும், அபிவிருத்திப் பங்காளிகளிலும் ஜப்பான் முதன்மை நாடாக விளங்கி வருகின்றது.
எனினும், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜப்பானின் உதவிகள் அதிக கவனம் பெறவில்லை.
இதன்படி, பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு இந்தியாவுடன் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கத்தயாராக இருப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது.
ஜப்பானின் அனுசரணையுடன் முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த இரண்டு முக்கிய அபிவிருத்தித்திட்டங்கள் இலங்கை அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்ட பின்னரும், ஜப்பான் இலங்கைக்கு உதவ முன்வந்திருக்கின்றது.