திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்குவது சம்பந்தமான உடன்படிக்கை எங்கே என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளருமான லக்ஷ்மன் கிரியெல்ல,(Lakshman Kiriella) அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் (Udaya Gammanpila) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டிய அந்த உடன்படிக்கையானது, நாடாளுமன்றம் மூடப்பட்டிருந்த சமயத்தில் இரகசியமாக கையெழுத்திடப்பட்டுள்ளது. அதனை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்பிக்குமாறும் கிரியல்ல, அமைச்சரிடம் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளிக்க எழுந்த அமைச்சர் கம்மன்பில, அந்த உடன்படிக்கையை இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டாம் என சபாநாயகர், தனக்கு அறிவித்ததாக கூறியுள்ளார்.
இது சம்பந்தமான நான் கடந்த வாரம் எழுத்து மூலம் சபாநாயகருக்கு அறிவித்தேன். தற்போது நடக்கும் நாடாளுமன்ற கூட்டம் ஜனாதிபதியின் சிம்மாசன உரை தொடர்பானது என்பதால், அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் சமர்பிக்குமாறு சபாநாயகர் அறிவித்தார்.
இதனால், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது, குறித்த உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்த்துள்ளேன் என கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் சிம்மாசன உரை சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் நடைபெறும் விததத்தின் போதே அமைச்சர் கம்மன்பிலவுக்கு கிரியெல்லவுக்கும் இடையிலான இந்த உரையாடல் நடந்தது.
அமைச்சர் கம்மன்பில தொடர்ந்தும் பொய் கூறி வருவதால், அவர் நாட்டில் நகைப்புக்கு உள்ளாகியுள்ளதாக கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை எண்ணெய் களஞ்சிய தொகுதியில் உள்ள 14 எண்ணெய் தாங்கிகளை இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு (IOC) வழங்க எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.