தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையும் புலம்பெயர் தமிழ் மக்களின் சார்பில் உலகத்தமிழர் பேரவையையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அழைத்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்காக அமெரிக்கா மற்றும் பிராந்திய சக்தியான இந்தியா ஆகியவற்றின் கூட்டிணைவில் புதிய கொள்கையொன்று வகுக்கப்படவுள்ள நிலையில் அதுபற்றி ஆழமாக ஆராய்வதற்காகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் முக்கிய சந்திப்புக்களை நிறைவுசெய்துகொண்டு பொதுநிகழ்வுகளில் பங்கேற்பதற்காக கனடாவிற்கு சென்றுள்ள சுமந்திரனிடத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற சந்திப்புக்கள் குறித்து வினவியபோது அங்கிருந்தவாறே மேற்படி விடயத்தினை உள்நாட்டு ஊடகம் ஒன்றிடம் பிரத்தியேகமாக ஏம்.எ. சுமந்திரன் தெரிவித்தார்.
அமெரிக்கச் சந்திப்புக்கள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2009 ஆம் ஆண்டு போர் நிறைவுக்கு வந்ததன் பின்னர் அதில் இழைக்கப்பட்ட மனித உரிமைமீற்லகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் சம்பந்தமாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இலங்கைக்கு விஜயம் செய்த அப்போதைய ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கீ மூனுடன் இணைந்து கூட்டு அறிக்கை வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) பொறுப்புக்கூறல் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
எனினும் அவரால் அடுத்த ஆண்டு நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு பொறுப்புறலுக்கான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஆணை வழங்கப்பட்டிருக்கவில்லை. இதேநேரம், 2009 இல் இலங்கையின் பொறுப்புக் கூறலை வலியுறுத்தி ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட அழைப்பில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கையை கண்டித்து ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்த தீர்மானமும் தோல்வி கண்டது. அதற்கடுத்து கனடா இலங்கையைக் கண்டித்து கொண்டுவந்த தீர்மானமும் வாக்கெடுப்பில் தோல்வி அடையும் என்பதால் முன்னகர்த்தப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில், 2011ஆம் ஆண்டு ஒக்டோபரில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் நான் உள்ளிட்ட நால்வர் அமெரிக்காவுக்குச் சென்று நான்குநாட்கள் முக்கிய தரப்பினரைச் சந்தித்துப் பேசியிருந்தோம். அந்தச் சந்திப்புக்களில் பொறுப்புக்கூறல் விடயம் தான் பிரதான இடத்தினைப் பிடித்திருந்தது.
அதன்பின்னர் 2012 பெப்ரவரி 12 இல் இலங்கைக்கு விஜயம் செய்த ரெபேர்ட் ஓ பிளேக் மற்றும் மரியா ஒட்டோரா ஆகியோர் இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி தீர்மானத்தினை அமெரிக்கா தலைமையேற்று கொண்டுவரப் போவதாக அறிவித்தனர். அதுவே எமது அமெரிக்க பயணத்திற்கு கிடைத்த பிரதிபலிப்பாக இருந்தது.
அன்றிருந்து அமெரிக்கா இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி தொடர்ச்சியாக தீர்மானங்களை நகர்த்தியது. பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறிய போதும்ரூபவ் பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து விடயங்களை கையாண்டது. அதன் பலனாகவே 46.1தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தற்போது பொறுப்புக்கூறலுக்கான சாட்சியங்களை திரட்டும் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு நகர்ந்து கொண்டு இருக்கின்றது.
அத்துடன் பொறுப்புக்கூறலுக்கு அப்பால் மீளநிகழாமையை உறுதிசெய்து நிரந்தரமான தீர்வொன்றை காண்பதிலும் அமெரிக்கா கரிசனையைக் கொண்டிருக்கின்றது. இந்த விடயம் ஐ.நா.மனிதா உரிமைகள் பேரவையின் 46.1தீர்மானத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல தருணங்களில் வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக, சம்பந்தன் இந்த விடயங்களில் அதீதமான கரிசனையைக் கொண்டுள்ளார். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு தமிழர்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமான வலியுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
எனினும் அது இதயசுத்தியானதாக இருக்குமா என்ற சந்தேகம் உள்ளது. இப்பின்னணியில் தான் சம்பந்தனை அமெரிக்காவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், அவர் நான் உள்ளிட்ட சட்டத்துறை நிபுணர்களான கனகஈஸ்வரன் மற்றும் நிர்மலா சந்திரகாசன் ஆகியோரை அனுப்பி வைத்திருந்தார்.
மேலும் அமெரிக்காவுக்கு புலம்பெயர் தரப்பினரின் கருத்துக்களும் அவசியமாக இருந்தது. அதனால் பிரித்தானியா, கனடா அமெரிக்கா, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவினரை அழைத்திருந்தது. அதன்பிரகாரம், நடத்தப்பட்ட சந்திப்புக்களில் அரசியல் தீர்வு, அதற்கான சட்ட நுணுக்கங்கள், தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
எமது கருத்துக்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு அவர்கள் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்த புதிய கொள்ளை வகுப்பொன்றை அமெரிக்கா செய்யவுள்ளது. அதன் பின்னர் அமெரிக்கா அதுகுறித்த நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளது.
இந்திய தரப்பினரைச் சந்தித்தது ஏன் ?
அமெரிக்கா இந்த புதிய கொள்ளை வகுப்பையும் அடுத்த கட்டச் செயற்பாடுகளையும் பிராந்திய சக்தியான இந்தியாவுடன் இணைந்து தான் முன்னெடுக்கவுள்ளது. அதன் காரணமாகவே, அமெரிக்காவுடனான சந்திப்புக்களின் மேம்பட்ட தகவல்களை நான் அமெரிக்காவுக்கான இந்தியத்தூதுவர் தரன்ஜித் சிங் மற்றும் ஐ.நா.வுக்கான இந்தியாவின் பிரதிநிதி திருமூர்த்தி ஆகியோருடன் பகிர்ந்துகொண்டேன்.
அமெரிக்க பாதுகாப்புத் தரப்பிரைச் சந்தித்தது ஏன்?
இந்துசமுத்திரப்பிராந்தியத்தினைப் பொறுத்தவரையில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து குவாட் எனப்படும் நாற்கர நாடுகளின் கூட்டமைப்பில் செயற்பட்டு வருகின்றது. அதுமட்டுமன்றி பிராந்திய சக்தியான இந்தியாவுக்கு தனது தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் கரிசனையும் உள்ளது. அதேபோன்று அமெரிக்காவும் தனது இந்தோ-பசுபிக் மூலோபாயத்தில் பாதுகாப்புக் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றது.
ஆகவே அரசியல் தீர்வு விடயங்களை முன்னகர்த்தும் போது ஏற்படக்கூடிய பாதுகாப்புச் சார்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிப்பதற்காக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு சபை பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாட வேண்டியிருந்தது.
அடுத்து என்ன?
எம்மிடத்தில் அரசியல் தீர்வு சம்பந்தமான கருத்துக்களை கோரியுள்ளனர். அரசியல்தீர்வு விடயத்தினை முன்னெடுக்கும் அதேநேரம் பொறுப்புக்கூறல் விடயமும் சமாந்தரமாக நகர வேண்டும் என்று கோரியுள்ளோம். அடுத்த கட்ட நடவடிக்கைகளை அமெரிக்காரூபவ் இந்தியா கூட்டு முன்னெடுக்கும் என்றார்.