எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவக் கூட்டத்தில் கட்சியின் தலைவருக்கு நெருக்கமான நபர் ஒருவருக்கு எதிராக கடுமையாக எதிர்ப்பு முன்வைக்கப்பட்டதாக தெரியவருகிறது.
கலாநிதி தயான் ஜயதிலக்கவுக்கு (Dayan Jayatilleka) எதிராகவே இந்த எதிர்ப்பு முன்வைக்கப்பட்டுள்ளது. தயான் ஜயதிலக்க தற்போது சஜித் பிரேமதாசவின் ஆலோசகராக செயற்பட்டு வருகிறார்.
கலாநிதி ஹர்ச டி சில்வா (Harsha De Silva), ஏரான் விக்ரமரத்ன (Iran Wickramarathna) ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தயான் ஜயதிலக்கவின் தற்போதைய பத்திரத்தை கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.
தயான் ஜயதிலக்க, அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதனை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு, கட்சியின் தலைவரிடம் கோரியுள்ளதாக தெரியவருகிறது.
தயான் ஜயதிலக்க, சஜித் பிரேமதாசவின் ஆலோசகராக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி மற்றும் கட்சியின் ஏனைய அமைப்புகளுக்கு பல்வேறு விரிவுரைகளை வழங்கி வருவதாக பேசப்படுகிறது.
ராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க, சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்துள்ளதுடன் அவர் காலத்திற்கு காலம் பல்வேறு அரசியல் முகாம்களுடன் இணைந்து செயற்பட்டு வந்துள்ளார்.
தயான் ஜயதிலக்க முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் (Varatharajah Perumal) தலைமையிலான கட்சியின் ஊடாக முதலாது இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக பதவி வகித்ததுடன் மாகாணத்தின் திட்டமிடல் மற்றும் இளைஞர் விவகார அமைச்சராகவும் பதவி வகித்தார்.
இதன் பின்னர் மகிந்த ராஜபக்ச அணியுடன் மிக நெருக்கமாக செயற்பட்ட அவர், கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியலிலும் உள்ளடக்கப்பட்டிருந்தார்.
எனினும் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக பதவியேற்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தயான் ஜயதிலக்கவை தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க மறுத்தார்.
தயான் ஜயதிலக்க, மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிற்கான இலங்கையின் நிரந்தரவதிவிடப் பிரதிநிதியாகவும் பிரான்ஸ் நாட்டுக்கான இலங்கையின் தூதுவராகவும் கடமையாற்றினார்.