இலங்கையில் வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக இலங்கை மக்கள் மூன்று வேளை உணவை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்டர் தெரிவித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பலரது வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவுகளின் விலை அதிகரிப்பு காரணமாக ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் உணவு சாப்பிடும் வேளைகளை குறைக்க நேரிட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஜூன் மாதம் பணவீக்கம் 54.6 வீதமாக பதிவாகியதுடன், போக்குவரத்து கட்டணங்களும் 128 வீதமாக அதிகரித்துள்ளது. உணவு பணவீக்கம் 80.1 வீதமாக பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கும் போஷாக்கான ஒரு வேளை உணவை சாப்பிட இலங்கை குடும்பம் ஒரு மாதம் 93 ஆயிரத்து 675 ரூபாவில் இருந்து ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 868 ரூபா வரை சம்பாதிக்க வேண்டும் என உணவு பணவீக்கத்தை அளவிடும் நிபுணரான பொருளாதார நிபுணர் ரேஹான தௌபிக் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கையில் நடுத்தர குடும்பம் ஒன்றின் மாதாந்த வருமானம் 76 ஆயிரத்து 414 ரூபாவாக இருக்கின்றது. அத்துடன் இலங்கை சனத்தொகையில் 20 வீதமாக இருக்கும் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் 17 ஆயிரத்து 572 ரூபா என புள்ளிவிபரங்கள் காட்டுக்கின்றன.
இந்நிலையில் தற்போதைய தற்போதைய நெருக்கடி காரணமாக மக்கள் படும் கஷ்டங்களை மேலும் உக்கிரமாக்கும் வகையில் மரக்கறிகளின் விலைகளும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு 145 ரூபாவாக இருந்த ஒரு கிலோ அரிசியின் விலை தற்போது 230 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் ரொய்டர் கூறியுள்ளது.