ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) – அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) ஆகிய இருவரும் சேர்ந்து அடுத்த தேர்தலை எதிர்கொண்டால், நல்லது என்ற மாற்று நம்பிக்கை (Alternative Belief) சிங்கள சமூக வலைத்தளங்களில் துளிர் விடுகின்றன.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட கல்விச் சமூகத்தை மையமாகக் கொண்ட சிங்கள சமூக வலைத்தளங்களில் இப்படியான கருத்துக்கள் வருகின்றன. என சிரேஷ்ட ஊடகவியலாளர் Amirthanayagam Nixon என்பவர் இந்த பதிவை முகநூலில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்தது,
அதாவது மெதுவான மாற்று அறுவைச் சிகிச்சை (Slow transplantation) எனலாம். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜே.வி.பிக்கும் கொள்கை முரண்பாடுகள் (Policy contradictions) இருந்தாலும், ஜே.வி.பி தற்போது உலக ஜனநாயகப் போக்கிற்கு ஏற்புடைய அரசியல் தன்மையின் (Relevant political nature) அவசியத்தை புரியக்கூடிய நிலையில் இருப்பதாகவும் சில சிங்களக் கல்வியாளர்கள் தமது பதவில் விதப்புரை செய்கின்றனர்.
ஜே.வி.பியைப் பிடிக்காது. ஆனாலும் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்தால் ஜே.வி.பிக்கு எதிரான தமது மன நிலையை மாற்றுவோம் என்றும் வேறு சிலர் பதிவிட்டிருக்கின்றனர்.
ரணிலும் அனுரவும் சேர்ந்து பயணித்தால் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க முடியுமென்ற வித்தியாசமான பார்வைகளும் பதிவுகளில் உண்டு.
ஜெனீவா உள்ளிட்ட சர்வதேச அரங்கில் தற்போதும் பேசு பொருளாக இருக்கும் தமிழர் பிரச்சினையை, இலங்கையின் உள்ளக விவகாரமாக மாற்ற, ரணில் விக்கிரமசிங்க புலமையான இராஜதந்திரி (Scholarly diplomat) என்ற அந்த மிதவாதச் சிங்களத் தேசியப் பார்வைகள் சிங்கள புத்திஜீவிகள் சிலரினால் முன் நகர்த்தப்படுகின்றன.
ஆகவே அனுரகுமார திசாநாயக்கா ரணிலுடன் இணைந்துவிட்டால் அதி தீவிரமற்ற சிங்களத் தேசியவாதத்தையும் (Moderate Sinhala nationalism) ஒரே கோட்டில் கொண்டு வந்துவிடலாம் என்ற தொனியும் அந்தப் பதிவுகளில் தெரிகின்றது.
பொருளாதார நெருக்கடி விலைவாசி உயர்வு. இலங்கையின் கடன் சுமை போன்ற பெரும் சிக்கல்களுக்கு மத்தியிலும் சிங்கள சமூக வலைத்தளங்களில் இப்படியான கருத்துப் பதிவுகளைப் பார்க்கும்போது,
தற்போதைய நெருக்கடியினால் குறிப்பிட்ட சில சிங்கள மக்கள், தமிழர் போராட்டக் காலங்களை ஞாபகப்படுத்தியும், நியாயப்படுத்தியும் பேசுவதை தொலைக்காட்சிச் செய்திகளில் அங்காக்கே பார்க்கிறோம், கேட்கிறோம்.
தியாகி திலீபன் கூறிய பயங்கரவாதத் தடைச் சட்டம் பற்றிய கருத்துக்களை ஜே.வி.பி. உறுப்பினர் விஜிதகேரத் நியாயப்படுத்தி நாடாளுமன்றத்தில் பேசியுமிருந்ததையும் கேட்டிருக்கிறோம்.
இக் கருத்துக்கள் எல்லாமே ராஜபக்சக்களுக்கு எதிரான மன நிலையில் மாத்திரமே பேசப்படுகின்றன.
ஆனால் அதிமான சிங்கள மக்களின் மன நிலை இன்னமும் மாறவில்லை என்பதற்குச் சிங்கள சமூக வலைத்தளத்தில் காணப்படும் இப் பதிவுகள் உதாரணம். 2015 இல் இருந்த ரணில் ஆதரவு போன்று 2022 இலும் அது மீண்டும் வேறுவடிவில் உருவொடுக்கிறது.
அது மாத்திரமல்ல சஜித் பிரேமதாசாவை ஒதுக்க வேண்டும் என்ற எண்ணமும் ரணில், அனுரவை விரும்பும் சிங்கள சமூக வலைத்தளங்களில் காணப்படுகின்றன.
ஏனெனில், ராஜபக்சக்களைப் போன்று சஜித்தும் அம்பாந்தோட்டையை மையப்படுத்தியவர் என்ற கருத்துக்களும் சஜித்தை விரும்பாமைக்கான காரணங்களில் ஒன்றாகக் கசிய விடயப்படுகின்றது.
எனவேதான் ராஜபக்சக்களைப் போன்ற தீவிர பௌத்த தேசியவாதம் தொடர்ந்து செல்வாக்குப் பெற்றால், அது மேலும் பொருளாதார நெருக்கடிகளையே உருவாக்கும் என்றதொரு அச்சம் சிங்களப் புத்திஜீவிகள் பலரிடம் தற்போது மேற்கிளம்பியுள்ளன.
இதன் பின்னணியிலேயே ரணில்- அனுரகுமார திஸாநாயக்கா கூட்டுத் தொடர்பான புதிய மாற்றுத் தள உரையாடல்கள் (Alternative Conversations) சிங்கள சமூக வலைத்தளங்களில் தலைகாட்ட ஆரம்பித்துள்ளது போலும்.
அதாவது ராஜபக்ச- சஜித் என்ற முகங்களை மாற்ற முற்படுகின்றார்கள். இருந்தாலும் சிங்களத் தேசியம் (Sinhala nationalism) என்பதில் ஒருமித்த கருத்துடன் மிதவாதம் என்ற போர்வைக்குள் பதுங்கிக் கொண்டு இயங்க முற்படுகிறார்கள் என்பதற்கு இவை சான்று.