4.5 கோடி ரூபாய் மோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஹர்திக் பாண்டியாவின் சகோதரரான வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021 ஆண்டு ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா மற்றும் அவர்களது பெரியப்பா மகனான வைபவ் பாண்டியா ஆகிய மூவரும் இணைந்து பாலிமர் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
அதில், ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா தலா 40 சதவீதம் முதலீடு செய்து இருந்தனர். வைபவ் பாண்டியா 20 சதவீதம் முதலீடு செய்ததோடு, நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.
வைபவ் பாண்டியாவை நம்பி ஹர்திக் மற்றும் க்ருனால் இந்த நிறுவனத்தை தொடங்கிய நிலையில், அவர்கள் கொடுத்த பங்குகளுக்கு ஏற்ப லாபம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதால், வைபவ் பாண்டியா தனியாக ஒரு நிறுவனத்தை தொடங்கி விற்பனையை மடைமாற்றி இருக்கிறார்.
மேலும், தனது 20 சதவீத லாபத்தை 33.3 சதவீதமாக மாற்றி இருக்கிறார். இதேவேளை அவர்கள் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 1 கோடி ரூபாயை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
இப்படி மொத்தமாக 4.2 கோடி ரூபாய் வரை வைபவ் பாண்டியா ஏமாற்றியதாக மும்பை பொருளாதார குற்றப் பிரிவு பொலிஸிடம் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா சார்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வைபவ் பாண்டியா மீது மோசடி வழக்குக பதிவு செய்த பொலிஸார் அவரை நேற்று (11-04-2024) கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் பாண்டியா சகோதரர்கள் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.