இறக்குமதியை இடைநிறுத்தாதிருந்தால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 300ரூபாவாக வீழ்ச்சி கண்டிருக்குமென இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
முதலீடுகள் மற்றும் கடன் வசதிகள் சம்மந்தமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.இங்கு பேசிய நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கூறியதாவது:
ரூபாவின் பெறுமதி பெருமளவில் வீழ்ச்சியடைந்திருந்தால்,பெரும்பாலான இறக்குமதியாளர்கள் இறக்குமதியைக் கைவிட நேரிட்டிருக்கும்.
வட மாகாணத்திலிருந்து தங்கம் கடத்தலைத் தடுப்பதற்கு, தங்கம் மீதான வரியை, இந்தியா கையாள்வதைப் போன்று பராமரிக்க வேண்டும்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.இதற்கு முன்வரும் முதலீட்டாளர்களுக்கு நீர் நிலைகளை அண்டிய பிரதேசங்களில் 15தொடக்கம் 20ஏக்கர் காணியை வழங்க அரசு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்திகுழு இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், அமைச்சின் செயலாளர், மத்திய வங்கி அதிகாரிகள், பிரதேச அரச, தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள், முதலீட்டாளர்கள், நொதேன் தனியார் வைத்தியசாலை பணிப்பாளர், பனை அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், அச்சுவேலி கைத்தொழில் பேட்டை நிர்வாகத்தினர் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்றுமுன்தினம் விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர், யாழ்.கச்சேரி, மாவட்ட செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்குச் சென்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.