வீதி பாதுகாப்பு உலகத் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி இந்திய லெஜண்ட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய லெஜண்ட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக நமாம் ஓஜா ஆட்டமிழக்காது 108 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
வினய் குமார் 36 ஓட்டங்களையும், யுவராஜ் சிங் 19 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் நுவன் குலசேகர 29 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்நிலையில், 196 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை லெஜண்ட்ஸ் அணி 18.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 162 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
அணி சார்பில் அதிகபடியாக இஷான் ஜயரத்ன 51 ஓட்டங்களையும், மஹேல உடவத்த 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் இந்திய அணியின் வினய் குமார் 38 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
அதன்படி, 33 ஓட்டங்களால் வீதி பாதுகாப்பு உலகத் தொடரை இந்திய லெஜெண்ட்ஸ் அணி கைப்பற்றியுள்ளது.
போட்டியின் ஆட்டநாயகனாக நமாம் ஓஜா தெரிவு செய்யப்பட்ட நிலையில் தொடர் ஆட்ட நாயகனாக திலகரட்ன தில்ஷான் தெரிவு செய்யப்பட்டார்.