விடுதலைப் புலிகளால் நான் ஐந்து முறை தாக்குதலுக்கு இலக்கானேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில் –
நான் எல்லா வகையான அவமதிப்புகளையும் தடுமாற்றங்களையும் அனுபவித்திருக்கிறேன். எனது வாழ்க்கையில் மிக மோசமான சில மரணங்களையும் நான் சந்தித்திருக்கிறேன்.
1971, 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகளால் ஐந்து முறை தாக்கப்பட்டேன். அனைத்து தாக்குதலில் இருந்தும் தப்பித்தேன்.
ஆனால் என்னைத் தாக்கிய விடுதலைப் புலிகள் அனைவரும் அழிக்கப்பட்டு விட்டனர். சிலர் சயனைட் உண்டு இறந்தார்கள். ஒரு சிலர் கைது செய்யப்பட்டனர், கைது செய்யப்பட்டவர்களில் சிலர் மீது வழக்குத் தொடரப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அவ்வாறானவர்களுக்கு நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தேன். அவர்களது குடும்பத்தைப் பாதுகாத்தேன்.
ஆனால் இந்த சமுதாயத்தின் நிலைமைக்கு பொறுப்புக்கூறல் அடிப்படை என்பதை நாம் அறிவோம்.
அதேபோல் இந்த ஈஸ்டர் தாக்குதலின் சூழ்நிலைகள் தொடர்பாக என்னைப் பற்றிய விசாரணை கோட்பாட்டின்படி நடந்த ஒன்று.
சில சமயங்களில் அரசியல் வெறுப்பில், இந்த சூழ்நிலைகளில் என்னைப் பற்றி நிறைய தவறான விளக்கங்கள் இருந்தன.
இந்த அவமானங்களை நாம் பொறுத்துத்தான் ஆகவேண்டும். புத்தர், யேசு போன்றோரும் துன்பத்தையும், பழிச் சொற்களையும் தாங்கிக்கொண்டு இருந்தார்கள் என்பதையும் மைத்திரி குறிப்பிட்டார்.