வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பிலான விபரங்கள் இனி வரும் காலங்களில் ஊடகங்களுக்கு வடக்கு மாகாணத்திலிருந்து நேரடியாக வழங்கப்படமாட்டாது என்று தெரியவந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.
வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம் ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்டுவந்த பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இது நாள் வரையில் வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் திணைக்கள அதி உயர் பீடத்தினராலும் யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினராலும் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுவந்தன.
இருந்தபோதிலும் குறித்த தகவல் வழங்கும் நடவடிக்கைகள் நேற்றுத் (22) தொடக்கம் முன்னெடுக்கப்படவில்லை.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களை விசாரித்தபோது,
இனிவரும் நாட்களில் தேசிய கொரோனா தடுப்புச் செயலணி (கொழும்பு) மட்டுமே குறித்த தகவல்களை வழங்கும் என்றும், வடக்கிலிருந்து தகவல்கள் வழங்கப்படுவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இருந்தபோதிலும் சற்று முன்னர் வரையில் கிழக்கு மாகாணத்தின் பிராந்திய சுகாதாரத் திணைக்களத் தரப்புக்கள் கொரோனா தொற்றுத் தொடர்பிலான தகவல்களை ஊடங்களுக்கு வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.