லண்டன் இரயில் நிலையத்தில் பெண்ணின் பாக்கெட்டில் கைவிட்டு செல்போன் திருடிய திருடன் சிசிடிவி கமெரா மூலம் சிக்கிய நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த திருட்டு சம்பவமானது கடந்தாண்டு அக்டோபர் மாதம் 17ஆம் திகதி ஹொல்பொர்ன் டுயூப் இரயில் நிலையத்தில் நடந்துள்ளது.
அங்கு டிக்கெட் எடுக்க பெண் ஒருவர் பணம் கொடுத்து கொண்டிருந்த போது அவர் உடையின் பாக்கெட்டில் கையை விட்டு மிஹைய் ரோமன் (39) என்பவர் செல்போனை திருடியுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் பொலிசார் விசாரித்து வந்தனர்.
குறித்த இரயில் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ரோமன் செல்போனை திருடியது உறுதியானது.
அதே நபர் கடந்த 24ஆம் திகதி லிவர்பூர் இரயில் நிலையத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றி திரிவதை பொலிசார் கண்டுபிடித்த நிலையில் அவரை கைது செய்தனர்.
அவர் மீதான வழக்கு வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடந்த நிலையில் 24 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதோடு திருடிய செல்போனுக்கான £350 தொகையை திரும்ப செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.