பெண்ணொருவரின் சடலத்தை பயணப்பையில் வைத்து எடுத்து வந்து கொழும்பு டாம் வீதி பகுதியில் கைவிட்டு சென்ற சந்தேகநபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
சந்தேகநபரான புத்தள பொலிஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டரே படல்கும்புர பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடக பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் 52 வயதுடைய குறித்த சந்தேகநபர் விஷம் பருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி அஜித் ரோஹண தகவல் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை கொலை செய்யப்பட்டு பயணப்பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டிருந்தது.
மேலும் சடலமானது ஹங்வெல்ல பகுதியில் இருந்து பேருந்து ஒன்றின் மூலம் எடுத்து வரப்பட்டு, டாம் வீதியில் கைவிட்டு செல்லப்பட்டுள்ளமை சிசிடிவி காணொளியின் மூலம் கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.