யாழ். பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் பள்ளிக்குடா, அரசபுரம் கிராம மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான மக்கள் குறைகேள் சந்திப்பொன்று நேற்றைய தினம் அரசபுரம் கிராமத்தில் நடைபெற்றுள்ளது.
அப்பிரதேச நீரின் இருநீர்த்தன்மை காரணமாக குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் அப்பகுதி மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த பொதுக்கிணற்றைச் சூழவுள்ள குளப்பகுதியை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர்,
தினமும் பி.ப 4-6 மணிவரை ஒரு குடும்பத்திற்கு 20-40லீற்றர் என்ற மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே குடிநீரை விநியோகித்து வருவதால், தமது தேவைக்கேற்ப நிறைவான குடிநீரைப் பெறுவதற்கான வழியை ஏற்படுத்தித் தருமாறும்,
வீதிப் புனரமைப்பு மற்றும் பொதுப் போக்குவரத்துக்கான பேருந்துசேவை உள்ளிட்ட தேவைப்பாடுகளை நிவர்த்திசெய்து தருமாறும் குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேளை, அரசபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறு பொதுமக்களுக்குச் சொந்தமான 12 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளதுடன், அக்காணிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெறும் சமநேரத்தில்,
ஒரேநாளில் 34 டிப்பர் மணல் இரானுவத்தினரால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அரசபுரம் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அப்பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைவாக குடிநீர் விநியோக சீராக்கம், வீதிப் புனரமைப்பு, பேருந்து சேவையை ஏற்படுத்தல் மற்றும் காணி அபகரிப்புக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், அப்பகுதி மக்களிடம் உறுதியளித்துள்ளார்.
குறித்த சந்திப்பில், கரைச்சி பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் மற்றும் அரசபுரம் கிராமத்தின் சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்