யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தைக்கு முன்பாகவுள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறைக்கும்பல், ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதுடன் வீட்டிலிருந்த பொருட்களையும் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (01) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 4 மோட்டார் சைக்கிள்களில் வாள், இரும்புக்கம்பிகள் சகிதம் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 6 பேர் கொண்ட வன்முறைக்கும்பலினாலேயே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டின் முன்பக்க தகர வேலியும் அடித்து வீழ்த்தப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் விதமாக குறித்த வன்முறை கும்பல் அடாவடியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மோற்கொண்டு வருகின்றனர்.