யாழ் மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் (11-02-2023) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில், அமைச்சர் ஒருவர் அழையா விருந்தாளியாகக் கலந்துகொண்டதால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) அதிருப்தியடைந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். மாவட்டச் செயலகத்தில் யுத்தத்தின் போது சொத்துக்களை இழந்தவர்களுக்கான இழப்பீடு மற்றும் வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு உதவித்தொகை என்பவற்றை வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.
இந்த நிகழ்வுக்கான ஒழுங்கமைப்பு ஜனாதிபதி செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தேர்தல் சூழல் என்பதால் அரசியல்வாதிகளுக்கு இந்த நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை.
நிகழ்வு ஆரம்பமாகி வரவேற்புரைக்கு யாழ். மாவட்டச் செயலரின் பெயர் அழைக்கப்பட்ட நிலையில், அமைச்சர் ஒருவர் அங்கு திடீரெனப் பிரசன்னமானார்.
இதனால் யாழ். மாவட்டச் செயலர் வரவேற்புரையை நிகழ்த்தாமல் திரும்பிச் சென்றார். இதனையடுத்து ஜனாதிபதி செயலக அதிகாரிகள் குழப்பமடைந்தனர்.
ஜனாதிபதி ரணில் தலையிட்டு வரவேற்புரை உள்ளிட்ட நிகழ்வுகளை நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டு காசோலை வழங்கும் நிகழ்வுக்கு நேரடியாகச் செல்லுமாறு ஜனாதிபதி செயலக பணிக்குழாமினருக்கு அறிவுறுத்தினார்.
இதனையடுத்து அந்த நிகழ்வு இடம்பெற்றது. சுமார் 250 பேருக்கான காசோலைகளை ஜனாதிபதி ரணில் தனித்து நின்று முழுமையாக வழங்கி முடித்தார்.
இவ்வாறான உதவிகள் வழங்கும் நிகழ்வுகளில் வழமையாக ஜனாதிபதி சம்பிரதாயத்துக்கு ஒரு சிலருக்கு வழங்கி வைக்க ஏனையோருக்கு அங்கு பிரசன்னமாகும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் வழங்கிவைப்பார்கள்.
ஆனால், அழையா விருந்தாளியாக அமைச்சர் கலந்துகொண்டமையால் அதிருப்தியடைந்தமையாலேயே ஜனாதிபதி ரணில், தானே சகல காசோலைகளையும் வழங்கி வைத்தார் என்று அறியமுடிகின்றது