மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் அரசு இன்னமும் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதையும் விடுக்கவில்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர்கள் தொடர்பில் இப்போதைக்கு நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. முதலமைச்சர் வேட்பாளர்கள் குறித்து உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும்.”
– என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும், கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் களமிறங்கவுள்ளனர் என்று நேற்று சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன.
இந்தச் செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைத் தொடர்புகொண்டு வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் விரைந்து நடத்தப்பட வேண்டும் என்பது இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கோரிக்கையாகும். எமது விருப்பமும் அதுவே ஆகும்.
எனினும், மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறைமையில் நடத்துவதா அல்லது புதிய முறைமையில் நடத்துவதா என்பது தொடர்பில் அரசுக்குள் இரு வேறுபட்ட நிலைப்பாடுகள் உள்ளன.
அதேவேளை, மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என்றும் அரசுக்குள் இருக்கும் சிலர் கங்கணம் கட்டிச் செயற்பட்டுக்கொண்டு வருகின்றனர்.
எது நடந்தாலும் மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இந்தியாவும் அதை விரும்பாது.
மாகாண சபைகளுக்கான தேர்தலைக் காலம் தாழ்த்தாது உடனே நடத்த வேண்டும் என்று அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி தலைமையிலான அரசிடம் எடுத்துரைத்திருந்தார்.
எனவே, மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையிலோ அல்லது புதிய முறைமையிலோ அரசு நடத்தியேக ஆக வேண்டும்.
ஆனால், மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் அரசு இன்னமும் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதையும் விடுக்கவில்லை.
இந்தநிலையில், வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர்கள் தொடர்பில் இப்போதைக்கு நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. முதலமைச்சர் வேட்பாளர்கள் குறித்து உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும்” – என்றார்